பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

121களபிரர்கள் ஆட்சியில் தமிழகம்

என்று கூறுகிறார். "இனிக் காலமென்பது கடைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்டது. இனிக் களமென்பது உக்கிரப் பெருவழுதியார் அவைக்களமென்பது. காரணமென்பது அக்காலத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக்கண்டு ஆலவாயிற் பெருமானடிகளால் வெளியிடப்பட்டது, என்று பாயிரம் கூறுகிறது.

இங்கும் முரண்பாடு காணப்படுகிறது. கடைச்சங்கத்தார்க்குத் தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தது என்பதைக் கூறி, அத்தொல்காப்பியத்தில் பொருளதிகாரமும் இருந்தது என்று கூறிய பிறகு 'காரணம் என்பது அக்காலத்துப் பாண்டியனாரும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு வெளியிடப்பட்டது' என்று கூறுவது முன்னுக்குப் பின் முரண்படுகிறது. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த பாண்டியன். அவன் ஏறத்தாழக் கி.பி. 200-ல் இருந்தவன், தொல்காப்பியம் முழுவதும் அகப்பொருள் இலக்கணம் உட்பட இன்றளவும் நின்று நிலவுகிறது. ஆனால், உரைப்பாயிர ஆசிரியர் முன்னுக்குப் பின் முரணாக, உக்கிரப்பெருவழுதியும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்பட்டனர் என்றும் அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்கு இறையானர் களவியலை உண்டாக்கினார் என்றும் எழுதுகிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்குப் பொருள் காண வல்லார் கிடைத்திலர் என்று முன்பு கூறிய இவர், பிறகு 'பொருளதிகாரம், பெறாது இடர்ப்பட்டனர் என்று கூறுகிறார். இங்கும் முன்னுக்குப் பின் முரண்படுகிறார்.

முதல்நூல்

இறையனார் அகப்பொருள் முதல் நூலா வழி நூலா என்னும் கேள்வி எழுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் இருக்கும் போதே இறையனார் இந்தக் களவியல் நூலைப் (அகப்பொருளை) புதியதாகப் பிற்காலத்தில் எழுதினார். இதனால் இது வழிநூல் எனப்படும் என்று கூறுவார்க்கு விடையாக உரைப்பாயிரம் எழுதியவர் இது முதல் நூல் என்று கூறுகிறார். "வழியென்பது இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற் செய்யப்பட்டமையால் வழி நூலென்று சொல்லப் படாது, முதனூல் எனப்படுமென்பது.

இறைவனே செய்த நூலாகையினால், பிற்காலத்து வழி நூலானாலும், இது முதல் நூல் என்று கூறுகிறார். முதல் நூல் இருக்கும்போது வழிநூல் (அல்லது இன்னொரு முதல் நூல்) செய்யப்பட்ட காரணம் என்ன? தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு உரை கூறுவோர் இல்லாமற் போனார்கள் என்று ஓரிடத்திலும் அது {பொருளிலக்கணம்) கிடைக்காமற் போயிற்று என்று இன்னொரு இடத்திலும் எழுதுகிற உரைப்பாயிரம் இந்த இடத்தில் குழப்புகிறது.