பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

என்று கூறுகிறது.[1]

இறையனார் அகப்பொருள் உரையும் அகப்பொருளைத் தமிழ் என்றும் கூறுகிறது. “இனி நுதலிய பொருள் என்பது நூற்பொருளைச் சொல்லுதலென்பது. இந்நூல் என்னுதலிற்றோவெனின் தமிழ் நுதலிய தென்பது” என்றும், “இனி நூனுதவியதூஉம் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலிய தென்பது” என்றும் அகப்பொருள் உரை கூறுகிறது.

அகப்பொருளின் பயன்

இறையனார் அகப்பொருளைக் கற்பதனால் உண்டாகும் பயன் என்ன என்பதை இந்நூலின் உரை கூறுகிறது. “இனிப் பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும் என்பது......... என்பயக்குமோ இது கற்க வெனின் வீடுபேறு (மோட்சம்) பயக்கும் என்பது” என்றும், “இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட் கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்” என்றும் உரை கூறுகிறது. அதாவது பக்திக் காதல் மறுமையில் வீடுபேற்றை அளிக்கிறது என்று உரை கூறுகிறது. இறையனார் அகப்பொருள் ஞான நூல் என்றும் கூறப்படுகிறது. “மதுரை ஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பாள்: என்னை பாவம்” அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று அதுதானும் ஞானத்திடையாகலான், யாம் அதனைத் தீர்க்கற் பாலம்” என்று கூறியது காண்க. இந்த உரையின் கருத்துப்படி, இறையனார் அகப்பொருள் நூலைக் கற்றால் ஞானமும் அதன் பயனாகிய வீடுபேறும் பெறலாம் என்பது தெரிகிறது.

இறையனார் களவியல் தோன்றியதேன்?

தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணம் இருக்கும் போது இறையனார் அகப்பொருள் (களவியல்) என்னும் பேரால் ஒரு புதிய அகப்பொருள் இலக்கணம் எழுதப்பட்டதேன்? பிற்காலத்தில், களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது அகப்பொருளுக்குப் பக்திக் காதல் என்ற புதிய பொருள் கற்பிக்கப்பட்டது. தொல்காப்பிய அகப்பொருள் உலகியம் காதலை மட்டும் கூறுகிறபடியால், அது புதிய பக்திக் காதல் கருத்துக்கு உரிய ஆதார நூலாகப் பயன்படவில்லை. ஆகவே பக்திக் காதலாகிய பேரின்பக் காதலுக்கு ஆதாரமான ஓர் இலக்கணநூல் தேவைப்பட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்ய இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் புதிதாக உண்டாக்கப்பட்டது. ஆனால் இறையனார் அகப்பொருள் சூத்திரங்கள் பக்திக் காதலைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அதனுடைய உரைமட்டும் பக்திக் காதலைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறது. இந்த உரையைக் கேட்டுத்தாள் உப்பூரிகுடி கிழான் மகன்


  1. மயிலை சீனிவேங்கடசாமி, தமிழ் அகம். Journal al Tamil Studies, No-3, September 1973, bp.1-3.