பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 124

உருத்திரசன்மன் மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்தார் என்று கூறப்படுகிறது. களவியல் உரை கூறுவதைப் பார்ப்போம்:

“அஃதேயெனின்.. அவ்வெட்டும் (எண்வகை மணமும்) உலகினுள்ளன; இஃது (இறையனார் அகப்பொருள்) அன்னதன்று. இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை (இறையனார் அகப்பொருளை) உலகவழக்கிலோடு இயையானென்பது.”[1]

15-ம் சூத்திர உரையில் “எனவே, இவ்வாற்றாறும் உலகக் களவு (களவியல்) அன்று என்பது பெற்றாம்” என்றும், 31 வது சூத்திர உரையில் “இல்லதனையே இல்லை என்றார்; இவன் உலகத்துத் தலைமகன் அல்லன் புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு” என்றும் உரை கூறிச்செல்கிறது.

32-வது சூத்திர உரையில் “இவ்வாற்றானும் இஃது (இறையனார் களவியல்) உலகத்து இயல்பள்றென்பது பெற்றாம்.....மூப்புப்பிணி உள்வழிச் சாக்காடும் உண்மையாம் என்பது கடா. அதற்கு விடை எங்கனமோ வெனின், இருதிங்கட் புக இவளும் பன்னீராட்டைப் பிராயத்தனாய் இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய்ச் செல்வதல்லது, மற்றைய நிகழா; உலகத்தினோடு இத்துணை மாத்திரையே ஒத்து மற்றை விகற்பமெல்லாம் ஒவ்வாவெனக் கொள்க” என்றும், 39 வது சூத்திர உரையில், “இந்நூல் (களவியல்) உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்றதாகலின், உலகியல் தோக்கிச் சாதிவரையான் இழிந்தாரெனப்பட்டது” என்றும், 60- வது சூத்திர உரையில், “அஃது இவ்வுலகினும் இயற்கையான் நிலைபெறாது புலவரான் இல்லது இனியது நல்லதென தாட்டப்பட்டதோர் ஒழுக்கமென்பார் ‘கண்ணிய’ என்றார்” என்றும் களவியல் உரை கூறுகிறது.

இதனால், புதிதாக உண்டாக்கப்பட்ட களவியல், உலகியல் அல்லாத இல்லது இனியது நல்லது என்று புலவரால் புனைந்துரைக்கப்பட்ட காதலைக் கூறுகிறதென்பது தெரிகிறது.

சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழகத்தில் பெருகி வளர்ந்து சைவ வைணவ சமயங்கள் தாழ்ந்து குன்றியிருந்த களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.5-ம் 6-ம் நூற்றாண்டுகளில்) சைவரும் வைணவரும் தங்கள் சமயங்களை வளர்ப்பதற்காகப் புதிய பக்தி இயக்கத்தை உண்டாக்கினார்கள்ழ அதன் காரணமாக அகப்பொருளுக்குப் புதிய கருத்துக்களைக் கற்பித்தார்கள். கடவுளுக்கும் உயிர்களுக்கும் தலைவன் - தலைவி முறையைக் கற்பித்தார்கள். சிவபெருமானை அல்லது திருமாலைத் தலைவனாகவும் பக்தனாகிய உயிரைத் தலைவியாகவும் கற்பித்து நாயகன் நாயகி பாவத்தையமைத்தார்கள். இந்த முறையில் செய்யுள் பாடுவதற்கு இலக்கணச் சான்று உண்டா என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். இக்கேள்விக்கு விடையாக இறையனார் அகப்பொருள் என்னும் நூலைப் புதிதாக உண்டாக்கி அதற்குத் தெய்வத்தன்மை கற்பித்தார்கள் போலும். இந்த நூலில் பேரின்பக் காதலைப்-


  1. களவியல் முதலாம் சூத்திர உரை