பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி 128

(தலைவிகளாகவும்) கற்பித்துப் பாடுகிற பேரின்பப் பக்திப் பாடல்களைப் புதிதாகத் தோற்றுவித்தார்கள். இந்தப் பக்திக் காதலைச் சைனரும்- பௌத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தெய்வத்துக்கும் மனிதருக்கும் காதல் உறவு கற்பிப்பது சரியன்று என்பது அவர்களது கொள்கை.

ஆனால், சைவ-வைணவர், சமணருக்கும் பௌத்தருக்கும் மாறுபாடான பக்திக் காதலை வற்புறுத்தி அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பரப்பினார்கள். தொடக்கக் காலத்தில் இந்தக் கொள்கை தமிழர்களால் ஏற்றக்கொள்ளப் படவில்லை என்று தோன்றுகிறது. பொதுமக்கள், முக்கியமாகப் புலவர்கள், தொல்காப்பிய இலக்கணம் கூறுகிற உலகியல் அகப்பொருளையே பின்பற்றினார்கள். ஆகவே, தெய்வீகக் காதலுக்கு இலக்கணச் சான்று பக்தி இயக்கத்தாருக்குத் தேவைப்பட்டது. ஆகவே, ‘இறையனார் அகப்பொருள்’ அல்லது ‘களவியல்’ என்னும் புதிய நூலை எழுதி அதை இலக்கணச் சான்றாகக் காட்டினார்கள். இதற்குத் தெய்வீகமும் பழமையும் கற்பிப்பதற்காகக் கதைகளைக் கற்பித்துக் கூறினார்கள்.

இது இறைவனால் (சிவபெருமானால்) உண்டாக்கப்பட்ட நூல் என்றும், தொல்காப்பியத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட நூலானாலும் இது முதல்வனால் செய்யப்பட்டபடியால் ‘முதல் நூல்’ என்றும் இது பேரின்பக் காதலைக் கூறுகிறபடியால் ‘ஞானநூல்’ என்றும் கூறினார்கள். இதற்குப் பழமை கற்பிப்பதற்காக இந்த நூலுக்கு உரை கேட்ட காரணிகள், கடைச்சங்க காலத்தில் இருந்தவரும் அகநானூறு என்னும் அகப்பொருள் செய்யுட்களைத் தொகுத்தவரும் ஆன உருத்திரசன்மன் என்றும், இதற்கு ‘மெய்யுரை’ கண்டவர் சங்கப்புலவர் என்றும், ஆனால் சங்கப்புலவரான நக்கீரர் கூறிய உரையே இதற்கு ‘மெய்யான உரை’ என்றும் கற்பித்தார்கள். ஆனால் இந்த உரை உடனே ஏட்டில் எழுதப்படாமல், மந்திர உபதேசம் செய்வதுபோல, பரம்பரை பரம்பரையாகப் பத்துத் தலைமுறைவரையில் ஆசிரியர் மாணவர் வழியில் ஓதப்பெற்றது என்றும் பத்தாவது தலைமுறையில் முசிறியாசிரியர் நீலகண்டனாரால் இவ்வுரை ஏட்டில் எழுதப்பட்டது என்றும் கதைகள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு, புதிய கருத்துக்கும் பழமையும் சிறப்பும் கற்பிப்பதற்காகவும் புதிய கொள்கைக்கு இலக்கணச்சான்று காட்டுவதற்காவும் இறையனார் அகப்பொருளும் அதுபற்றிய கதைகளும் கற்பிக்கப்பட்டன என்று தோன்றுகிறது. இவர்கள் புதிதாக உண்டாக்கிய பேரின்ப அகப்பொருள் கொள்கை நாட்டில் மான்றிப் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் கி.பி.7-ம் நூற்றாண்டில் தாள் அப்பர், சம்பந்தர் ஆகிய சைவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பாடினார்கள் என்பதை அறிக்றோம். பக்தி இயக்கமும் பேரின்பமான அகப்பொருள் கொள்கையும் தோன்றிய பிறகே இத்தகைய பாடல்களைக் காண்கிறோம். இதற்கு முன்பு, கடவுளுக்கும் பக்தனுக்கும் உண்டான பேரின்பக் காதல் பற்றிய செய்யுள் ஒன்றேனும் கிடையாது. இது தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான செய்தியாகும்.