பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


இணைப்பு-4

நக்கீரர் காலம்

சங்க காலத்தில் கி.பி. 200க்கு முன்பு இருந்த நக்கீரர் வேறு, களப்பிரர் காலத்தில் இருந்த நக்கீரதேவ நாயனார் வேறு என்பதைக் கண்டோம். ஆனால் சில அறிஞர்கள் இரண்டு நக்கீரரும் ஒருவரே என்று கருதிக் கொண்டு இவர்கள் இருவரும் கி.பி. 5-ம் நூற்றாண்டில் களப்பிரர் காலத்தில் இருந்தவர்கள் என்று எழுதியுள்ளனர். இவர்கள் இவ்வாறு எழுதுவதற்குக் காரணம் என்னவென்றால், இறையனார் அகப்பொருள் என்னும் களவியலுக்கு உரை எழுதியவர், அத்தூலின் உரைப்பாயிரத்தில், சங்ககாலத்து நக்கீரரும் களவியலுக்கு முதன்முதல் உரை கண்ட நக்கீரரும் ஒருவரே என்று கருதும்படி எழுதியுள்ளதுதான். களவியல் உரைப்பாயிரம் கூறுவதை முழுஉண்மை என்று இவர்கள் கருதிக்கொண்டு ஆராய்கிற படியால் இரண்டு வேறு நக்கீரர்களும் ஒருவரே என்று எழுதியுள்ளனர். இரு.எம். எஸ். இராமசாமி அய்யங்கார். தாம் எழுதிய ‘தென்னிந்திய சைன ஆய்வுகள்’ என்னும் ஆங்கில நூலில் இவ்வாறு எழுதுகிறார்:

“நக்கீரரும் செங்குட்டுவனும் சாத்தனாரும் ஆகிய இவர்கள் சமகாலத்தில், சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த நக்கீரர் இறையனாரில் களவியலுக்கு உரை எழுதிய நக்கீரர் ஆவார்; இந்த உரையை அவர் எழுதாமல் வாய்மொழியாகவே கூறினார். ஆசிரியர்-மாணவர் என்னும் வழிமுறையில் பத்துத் தலைமுறைவரையில் இந்த உரை வாய்மொழியாகவே கூறப்பட்டு வந்தது. இந்தச் செய்தியை, பின்னர் உரையை ஏட்டில் எழுதிவைத்த ஆசிரியர் கூறுகிறார். உரையை ஏட்டில் எழுதிய உரையாசிரியர் எந்தக் காலத்தில் இருந்தவர் என்பதை, அவர் தம்முடைய உரையில் அடிக்கடி கூறுகிற நெல்வேலியிலும் சங்கமங்கையிலும் போரில் வென்றவனும் அரிகேசரி பராங்குசன் நெடுமாறன் என்னும் பெயர்களைக் கொண்டவனும் ஆகிய பாண்டியன் இருந்த காலத்தைக் கொண்டு தீர்மானிக்கலாம். வேள்விக்குடிச் செப்பேட்டிலிருந்து இந்தப் பாண்டியன் கி.பி.770-ல் வாழ்ந்திருந்த ஜடிலவர்மன் பராந்தகனுடைய தந்தை என்பதை அறிகிறோம். ஆகையினாலே களவியல் உரையை ஏட்டில் எழுதிய ஆசிரியர் கி.பி.8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர் காலத்திலிருந்து பத்துத் தலைமுறைகளைக் கணக்கிட்டால், தலைமுறை ஒன்றுக்குச் சராசரி 30 ஆண்டு என்று கணக்கிடுவோமானால், முதல்முதல் உரை கூறிய நக்கீரர் காலம் கி.பி.5-ம் நூற்றாண்டு என்றாகிறது. கி.பி.770-ல் இருந்து 108x30 ஐக் கழிக்க வேண்டும். ஆகவே இந்த நூற்றாண்டே சங்கம் (கடைச்சங்கம்) இருந்த காலமாகும்.”

இவர் ஆராய்ந்து கண்ட முடிவு சரியே. இறையனார் அகப்பொருள்