பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பிற்சேர்க்கை - I

அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்”: ஒரு பார்வை.

அ.மார்க்ஸ்

“எவ்விடத்தும் சிவன் கோயில்; எவர் நெஞ்சிலும் சிவஞானம்; எவர் மொழியிலும் சிவநாமம்; எவர் மேனியிலும் சிவ வேடம்; எவர் பணியும் சிவப்பணி. எங்கும் எல்லாம் சிவமேயாய்ச் சிறந்து நின்றமையின் தென் தமிழ்நாடு சிவலோகமாய்க் காட்சியளித்தது” என (ஔவை சு.துரைசாமிப்பிள்ளை, சிவஞான போதம் மூலமும் சிற்றுரையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1953), சைவப் பண்பாடே தமிழர் பண்பாடு என்று நம் தமிழறிஞர்கள், தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் ஒற்றைப் பரிமாணமாய், இறுக்கமாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் சமணமும் பவுத்தமும் இன்றித் தமிழில்லை என்பதை அடித்து நிறுவியவர் அறிஞர் சீனி. வேங்கடசாமி அவர்கள். மறைந்து போன தமிழ் நூல்கள், களப்பிரர் காலம், முதலான தமிழ் மரபால் ஒதுக்கப்பட்டவற்றின் பால் அவர் கரிசனம் குவித்திருந்தது போற்றத் தக்கது.

தமிழாய்வுகள் என்பன பல்கலைக்கழகங்களுக்குள்ளும் சைவ மடங்களுக்குள்ளும் சிறைப்பட்டிருந்த காலம் அது. தமிழகச் சாதிப் படிநிலை வரிசையில் உச்சியிலிருந்த இரு சாதிப் பிரிவினரின் கையில் தமிழாய்வுகள் முடங்கியிருந்த உண்மையையும் இன்று நம்மால் மறந்து தொலைக்க இயலவில்லை. இந்தத் தளைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டிருந்ததால் தானோ என்னவோ வேங்கடசாமியவர்களின் கரிசனங்கள் ஒதுக்கப்பட்டவற்றின் பால் திரும்பின. அன்னாரின் நூற்களிலேயே முக்கியம் என எனக்குத் தோன்றுவது ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.’

வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கவலையும் துன்பமும் நோயும் தொடர்ந்து வருத்துகிற காலத்தில் இந்நூலை எழுதினேன் என அவரலால் குறிப்பிடப்படும் இந்நூல் 1975ம் ஆண்டு வெளிவந்தது. "அக்கால சமயங்களின் வரலாறு, செய்யுள் இலக்கண வரலாறு ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்த போது களப்பிரர் ஆட்சிக் காலத்தைப் பற்றிய சில செய்திகள் புதிதாய்ப் புலனாயின” என்று முகவுரையில் குறிப்பிடும் வேங்கடசாமி