பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

நிலைநாட்ட முயன்ற மு.அருணாசலம் பிள்ளையவர்களின் கருத்தை (1976) மட்டும் இங்கே இறுதியாய்க் குறிப்பிடுவது அவசியம். சொல்வார்:

“களப்பிரர் எந்த அரச பாரம்பரியத்திலும் (Royalty) வந்தவர்களல்லர். தொன்மைக் காலத்தில் அரசப் பாரம்பரியத்திற்கே ஆளுமை (Personality) இருந்தது. இந்த ஆளுமை எல்லாவிதமான மத மற்றும் இலக்கிய நிறுவனங்களிலும் தனது முத்திரையைப் பதித்து வந்தது. எனவே அரசப்பாரம்பரியமற்ற களப்பிரர்கள் நமது பழம்பெருமைக்குச் சொல்லத்தக்க பங்களிப்பு எதையும் செய்ய இயலாதவராக இருந்தனர். மொழியையும் பண்பாட்டையும் அவர்களது ஆட்சி அழித்தது ஒன்றைத் தவிர வேறெதையும் செய்யவில்லை....ஏழாம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் மேற்கொண்ட புனிதப் போர் (crusade) மீண்டும் சைவத்தை நியாயமான அதன் பீடத்தில் (legitimate pedestal) ஏற்றியது.”

(Kalabhras in the Pandya country, University of Madras, 1979 பக்.

35, 36- அழுத்தம் நமது)

நூறாண்டு வரிசையில், இலக்கிய வரலாற்றைத் தொகுத்தளித்த அருணாசலத்தின் மேற்கண்ட கூற்றில் பல அம்சங்கள் ஆழ்ந்து சிந்தித்தற்குரியன. களப்பிரரை அரச பாரம்பரிய மற்றவர்கள் என்கிறார். அரசபாரம்பரியம் அற்றவர்களால் பண்பாட்டுப் பெருமைக்குப் பங்களிப்பு ஏதும் செய்ய இயலாது என்கிறார். சம்பந்தரின் புனிதப் போர் எண்ணாயிரம் சமணரைக் கழுவேற்றியது முதலானவை ‘மீண்டும்’ சைவத்தை அதன் ‘நியாயமான’ பீடத்திவேற்றியது என்கிறார்.

ஆக வேங்கடசாமிக்கு முந்திய தமிழாய்வறிஞர்கள் அனைவரும் களப்பிரர் பற்றிக் கூறிய கருத்தைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்ளலாம். களப்பிரர் என்னும் அரச பாரம்பரியமும் நாகரிகமும் அற்ற அந்நியப் படையெடுப்பாளர்கள், சங்க கால இறுதியில் தமிழகத்தின் மீது படையெடுத்துச் சங்கப் பொற்காலத்தை அழித்தனர். மீண்டும் ஆறாம் நூற்றாண்டு இறுதியில் பாண்டிய பல்லவர்கள் அவர்களை அகற்றியது வரை தமிழக வரலாறு ஓர் இருண்ட காலம்; மொழியும், பண்பாடும், கலைகளும், நாகரீகமும் சீரழிக்கப்பட்ட காலம் புறச் சமயங்களான சமணமும் பவுத்தமும் கோலோச்சிய காலம். மீண்டும் ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தப் பெருமான் தோன்றி பாண்டிய, பல்லவ ஆட்சிகளின் துணையோடு புறச் சமயங்களை ஓட்டி, சைவத்தை அதற்குரிய இடத்தில் அமர்த்தினார். பிற்காலத்தில் வேளான மரபினராகச் சைவம் போற்றிய களப்பாளர், களப்பாளராயர் முதலானோருக்கும் நாடோடி அநாகரிகர்களான களப்பிரருக்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

இக்கருத்துக்கள் யாவும் சென்ற நூற்றாண்டில் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கிய அறிஞர் பெருமக்களால் முன்மொழியப்பட்டதோடன்றி பல்கலைக்கழகங்களாலும் பாடநூல் நிறுவனங்களாலும் முன்வைக்கப்பட்டு அதிகாரபூர்வமான சொல்லாடல்களாக நிலை நிறுத்தப்பட்டன என்பதும் சிந்தனைக்குரியது.