பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

141 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

எருமை வெளியனார் என்கிற சங்கப்புலவர் இருந்தமையும் சங்ககாலப் புறத்திணைகளின் எருமை மறம் என்றொரு துறை வழங்கப் பட்டமையையும் தாம் இங்கு கருதிப் பார்க்க வேண்டும். எனவே கலாச்சார மையத்தின் விளிம்பாய் இருந்த மக்கட் பிரிவினரை 'அந்நிய' ராய்க் கட்டமைப்பதும் பிறகு 'அந்நியர்'களை எதிரிகளாய்க் கட்டமைப்பதும் சென்ற நூற்றாண்டு தேசிய வரலாறெழுதியலின் ஆபத்தான கூறு என்பதை தாம் இத்துடன் இணைத்துப் பார்க்கத் தவறக்கூடாது. அகில இந்தியத் தேசிய வரலாற்றாசிரியர்கள் இந்து அல்லாதோரை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைத்தனர்; தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர்கள் சைவர்களும் வைதீகர்களும் அல்லாதோரை அந்நியர்களாகவும் எதிரிகளாகவும் கட்டமைத்தனர். மு.அருணாசலம் அவர்கள் களப்பிரர் காலம் பற்றிச் சொல்ல வரும் போது,

"(இது)தமிழ்க் கலாச்சாரத்தின் மிக மோசமான காலங்களில் ஒன்று. 14ம் நூற்றாண்டின் முதற் காற்பகுதியில் மாலிக்காபூர் மதுரையைக் கைப்பற்றியதற்கும் அடுத்த நூற்றாண்டில் முகமதியப் படைகள் விஜய நகரத்தை அழித்ததற்கும் இது சமம். யாருக்கேனும் இது பொற்காலமாய் அமைந்தது எனச் சொல்வது வரலாற்றைத்

திரிப்பதாகும் (அதே நூல் பக். 34)

எனக்கூறி களப்பிரர்களை மாலிக்காபூருடலும், விஜயநகர இந்து ராச்சியத்தை வீழ்த்திய முகமதியர்களுடனும் ஒப்பிடுவதைக் காண்க.

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூல் வெளிவருவதற்கு முன்பு ஓங்கி ஒலித்த குரல்கள் இவைதான். நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தும் இதுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுந்த மாற்றுக்குரல்கள் மிகவும் பலவீனமாகவே அமைந்தன.

3

இனி சீனி.வேங்கடசாமி அவர்கள் தனது நூல் வாயிலாக வந்தடைந்த முடிவுகளையும் அவரால் விடைகாண இயலாமற் போன புள்ளிகளையும் தொகுத்துக் கொள்வோம். அவர் வந்தடைந்த முடிவுகளாவன:

1. காலம்:களப்பிரர் காலமென்பது கி.பி. 250 தொடங்கி கி.பி.575க்கு இடைப்பட்டதாகும்.

2. களப்பிரர் யார்: களப்பிரர் என்போர் இப்போதைய சிரவண பௌகோள என்னும் களபப்பு நாட்டுப் பகுதியிலிருந்து குடிபோந்த கன்னடரே. இப்போதைய பெங்களூர் கோலார் வரையிலும் களபப்பு நாடு பரவியிருந்தது. எனவே"களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தவரல்லர். அவர்கள் தமிழகத்திற்கு அண்மையிலிருந்த கன்னட வடுகர். எனவே அவர்கள் திராவிட இனத்தவரே" (அழுத்தம் நமது). மு. இராகவையங்காரும் கிருஷ்ணசாமி அய்யங்காரும் சொல்வது போல வேங்கடக் கள்வரும் 'கள்வர் கோமான் புல்லி' களப்பிரரும் ஒன்றன்று. இருவரும் வேறுவேறு, வேங்கடநாடு தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த