பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

காலத்தின் இறுதியில் உச்சம் பெறுகிற விவசாய உருவாக்கம் பின்னர் திடிரென வீழ்ச்சியுறுவதையும் பார்த்தோம். பல்லவர்களுக்கு முந்திய இக் கால கட்டத்திய முரண்கள் கலித்தொகை மற்றும் சிலப்பதிகாரத்தின் வேட்டுவ வரி முதலானவற்றில் வெளிப்படுவதை ஸ்டெய்ன் சுட்டிக்காட்டுகிறார். இது குறித்து அவர் சொல்லுவதைக் கீழ்க்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம்.

"பல்லவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் தமது அதிகாரங்களை அதிகரித்துக் கொண்டவர்களாக விளங்கிய தாழ்திலச் சமவெளி (low land plain) மக்களுக்கும் மலைசார்ந்த மற்றும் புன்செய் நிலங்(hilly and dry lands) களைச் சேர்ந்த அச்சத்திற்குரிய மக்களுக்குமிடையே இருந்த விரோதத்தை (hostility) இப்பாடல்கள் (வேட்டுவவரி, கலி,...) குறிக்கின்றன. சங்க இறுதியில் வளத்திலும் சனச்செறிவிலும் (populots) மிக்கவர்களாக இருந்த விவசாயச் சமூகங்கள் மேய்ச்சல் இன (ஆயர்கள்) மற்றும் மீன் பரவர் குழுக்களில் பெரும்பாலானவற்றை உட்செரிப்பதில் (assimilating) வெற்றியடைந்திருக்க வேண்டும். வளர்ச்சியடைந்த விவசாயச் சமூகங்களின் வளங்கள் (சமவெளி, வண்டல் நிலங்கள் முதலியன) இந்த இனக்குழு மக்களுக்குக் சுவர்ச்சிகரமாய் இருந்திருக்கும். குறிப்பிடத்தக்க நலன்களை அளிப்பதாகக் சொல்லி {substantial advantages) மலைசார்ந்த மற்றும் புன்செய் நில மக்கள் விவசாயச் சமூகங்களின் விளிம்புகளாக உட்செரிக்கப்பட்டனர். எனினும் இந்த விவசாயம் சாராத மக்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவினர் ஆங்காங்கு சிதறுண்டு தனித்தனிக் குழுக்களாய்க் (Scattered isolated pockets) கிடந்தனர். இந்தத் துணைக் கண்டத்திலும் தென் கிழக்கு ஆசியாவின் ஏனைய பகுதிகளிலும் சமவெளி மக்களுக்கும் மலைசார்ந்த மற்றும் புன்செய் நில மக்களுக்குமிடையிலான இழுபறி (tension) நீண்ட காலம் நிலவியது போலவே இங்கும் இருந்தது' (Peasant state and society

in Medival South India, OUP, 1980 பக். 75)

என்று இங்குள்ள நிலையைத் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளோடு ஒப்பிட்டுச் சொன்னாலும் ஒரு வேறுபாட்டையும் ஸ்டெய்ன் குறிப்பிட்டுச் சொல்வார். தென்னிந்தியாவில் இந்த இழுபறி ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்தது. இதற்கான காரணங்கள் இரண்டு. முதலாவதாக, இங்கே விவசாயம் சமூகம் ஒற்றைப் பெருஞ் சமூகமாக உருத்திரளவில்லை. தாக்குதல்களுக்கு வாய்ப்பான (vulnerable to raids) சிதறுண்ட விவசாயக் குடியிருப்புகளாகவே அவை அமைந்தன. மலைத் தொடர்கள் குறுக்காக நீளும், தென்னிந்தியப் புவியியல் இதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம். எனவே மலைசார்ந்த மற்றும் புன்செய் நிலக்குடிகள் முற்றிலுமாய் அழித்தொழிக்கப்பட இயலாதவர்களாக இருந்தனர். தவிரவும் இவர்கள் விவசாயச் சமூகத்திலிருந்து தங்களை முற்றிலுமாய்த் துண்டித்துக் கொள்ளவுமில்லை. பௌதிக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இரு பிரிவினருக்குமிடையே ஒரு அருகாமை (Physical and cultural proximity) இருந்து வந்தது. இது