பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி

34

கிரி மேகவன் என்றும் கூறப்படுகிறான்.

ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332-341)

ஜேட்டதிஸ்ஸன், ஸ்ரீமேகவண்ணனுடைய தம்பி, இவன் யானைத் தந்தத்தில் அழகான உருவங்களையும் கலைப்பொருள்களையும் செய்வதில் வல்லவன். அந்தத் தொழிலைப் பலருக்கும் கற்பித்தான். இவன் இலங்கையை ஒன்பது ஆண்டுகள் அரசாண்டான்.[1]

புத்ததாசன் (கி.பி.341-370)

இவன் ஜேட்டதிஸ்ஸனுடைய மகன். மருத்துவக் கலையில் வல்லவனான இவன் மனிதரின் நோயைத் தீர்த்ததுமல்லாமல் ஒரு பாம்பின் நோயையும் தீர்த்தானாம். நாட்டில் ஆங்காங்கே மருத்துவர்களை நியமித்து நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய ஏற்பாடு செய்தான். மருத்துவருக்கு மருத்துவ விருத்தி நிலங்களைக் கொடுத்தான். யானை குதிரைகளின் நோய்களையும் போரில் புண்பட்ட வீரர்களின் நோயையும் போக்க வைத்தியர்களை நியமித்தான்.

இவ்வரசன் காலத்தில் மகாதம்ம கீர்த்தி என்னும் பிக்கு பௌத்த சூத்திரங்களைச் சிங்கள மொழியில் பெயர்த்தெழுதினார். இவ்வரசனுக்கு எண்பது மக்கள் இருந்தார்களாம். ப-ஹியன் என்னும் சீன யாத்திரிகர் இவ்வரசன் காலத்தில் இலங்கைக்கு வந்து தங்கினார். ப-ஹியன் இலங்கையில் கி.பி. 411-12-ம் ஆண்டு தங்கினார் என்று அறியப்படுகிறது. புத்ததாச அரசன் இருபத்தொன்பது ஆண்டுகள் அரசாண்டான்.[2]

உபதிஸ்ஸன் (கி.பி.370-412)

புத்ததாசன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான உபதிஸ்ஸன் இலங்கையை யரசாண்டான். இவனை இரண்டாம் உபதிஸ்ஸன் என்பர். பௌத்தப் பள்ளிகளுக்கும் பௌத்தப் பிக்குகளுக்கும் இவன் தான தருமங்களைச் செய்தான். அங்கு ஊனம் உள்ளவர்க்கும் குருடர் தோயாளிகளுக்கும் மருத்துவமனைகளை அமைத்தான். இவன் 18 ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய இராணி, இவனுடைய தம்பியான மகாநாமன் என்பவளோடு கூடா வொழுக்கங் கொண்டிருந்தாள். மகாநாமன் பௌத்த பள்ளியில் சேர்த்து பௌத்த பிக்குவாகத் துறவு கொள்ள இருந்தான். அவன் புத்தப் பள்ளியில் பப்பஜா என்னும் நிலையில் இருந்தாள். பப்பஜா என்பது துறவு பூணுவதற்கு முந்திய புகுநிலை. (முழுத்துறவு கொள்வதற்கு உபசம்பதா என்பது பெயர்) மகாநாமனோடு கூடாவொழுக்கங் கொண்டிருந்த இராணி அரசனைக் (உபதிஸ்ஸனை) குத்திக் கொன்று விட்டாள். இதையறிந்த பௌத்தப் பள்ளியில் இருந்த மகாதாமன் அரண்மனைக்கு வந்து அரசாட்சியைக் கைக்கொண்டான். [3]


  1. Ibis 100-104
  2. Ibid 105-178
  3. Ibid 179-210)