பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

களப்பிரருக்குக் கீழடங்கிச் சிற்றரசர்களாக இருந்தார்கள். அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. பாண்டி நாட்டில், களப்பிரருக்குக் கீழடங்கியிருந்த பாண்டிய பரம்பரையில் ஒரு பாண்டியன், தன்னுடைய இரண்டு மகள்களையும் ஒரு தமிழச் சேனையையும் அழைத்துக் கொண்டு, இலங்கைக்கு வந்தான். அங்கு அரசாண்டு கொண்டிருந்த மித்தசேனனோடு போர் செய்தான். மிந்தசேனன் போரில் இறந்து போனான். பாண்டியன் இலங்கையாட்சியை கைப்பற்றி அனுராதபுரத்திலிருந்து இலங்கையை யரசாண்டான். இந்தப் பாண்டியனுடைய பெயர் தெரியவில்லை. இவனைப் பாண்டு (பாண்டியன்) என்று இலங்கை வரலாறு கூறுகிறது.

பாண்டு (பாண்டியன், கி.பி. 436-441)

பாண்டியன் இலங்கையை யரசாண்ட போது தலைநகரமான அநுராதபுரத்திலிருந்த சிங்கள அரச குடும்பத்தவரும் பெருங்குடி மக்களும் தெற்கே உரோகண நாட்டுக்குப் போய்விட்டார்கள். இலங்கையின் தென்கிழக்கிலிருந்த உரோகணநாடு அந்தக் காலத்தில் கலகக்காரர்களுக்குப் புகலிடமாக இருந்தது. உரோகண நாட்டுக்குச் சென்றவர்கள் தனக்கு எதிராகக் கலகஞ் செய்வார்கள் என்பதையறிந்த பாண்டியன் தன்னுடைய சிங்கள இராச்சியத்தின் தெற்கெல்லைகளில் பல கோட்டைகளை அமைத்து பாதுகாப்புகளைச் செய்தான். அவன் தெற்கு எல்லையில் இருபத்தொரு கோட்டைகளை அமைத்துப் பாதுகாத்தான்.

பாண்டியனுடைய இலங்கை இராச்சியம் வழக்கம் போல இராஜரட்டம் (இராஜ ராட்டிரம்) என்று கூறப்பட்டது. அதன் எல்லை கிழக்கு மேற்கு வடக்குப்புறங்களில் கடல்களும் தெற்கே மாவலிகங்கையாறும் ஆக அமைந்திருந்தன. மாவலிகங்கை என்பது இலங்கையின் பெரிய ஆறு. இதன் சரியான பெயர் மாவாலுக கங்கை என்பது. மா- பெரிய வாலுகம்- மணல், பொருள். மாவாலுக கங்கை என்பது மாவலிகங்கை - என்று வழங்கப்படுகிறது.

அநுராதபுரத்தில் மகாவிகாரை என்னும் பௌத்தப்பள்ளியில் மோரிய குலத்தைச் சேர்ந்த ஒரு பௌத்தப் பிக்கு இருந்தான். அவனுடைய தங்கை மகனான தாதுசேனன் என்பவன், மகாவிகாரையைச் சேர்ந்த தீக சந்தனப் பரிவேணையில் (பரிவேணை - பௌத்த மதக் கல்லூரி) பௌத்த மத நூல்களைப் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அரசாலும் ஊழ் இருக்கிறது என்று நம்பிய அந்தப்பிக்கு மதக்கல்வியைப் போதிக்காமல் அரசியல் நூல்களைக் கற்பித்துக் கொண்டிருந்தான்.

தனக்கு எதிராகப் பெனத்த விகாரையில் தாதுசேனன் மறைவாக இருக்கிறான் என்பதையறிந்த பாண்டியன் அவனைப் பிடித்துக் கொண்டு வரும்படி தன்னுடைய வீரர்களை அனுப்பினான். பிடிக்க வருகிறார்கள் என்பதை முன்னமேயறிந்த தாது சோனும் அவனுடைய மாமனான பிக்குவும் நகரத்தை விட்டுப் புறப்பட்டுத் தெற்கு எல்லையான மாவலிகங்கையைக் கடந்து தெற்கே போய் விட்டார்கள். அவர்கள்