பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

38

தெற்கு சென்று கோண ஓயாவைக் (இப்போதைய காளஓயா) கடந்து உரோகண நாட்டுக்குப் போய் விட்டார்கள். அவர்கள் உரோகண நாட்டில் கலகக்காரர்களோடு சேர்ந்துகொண்டு அரசனுக்கு எதிராகக் கலகஞ் செய்யும் வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பாண்டியன் இலங்கை இராச்சியத்தை ஐந்து ஆண்டுகள் அரசாண்டபிறகு காலமானான்.[1]

பரிந்தன் (கி.பி. 441-444)

பாண்டியன் காலமான பிறகு அவனுடைய மூத்த மகனான பரிந்தன் இலங்கையை யரசாண்டாள். இவனுடைய ஆட்சிக் காலத்து வரலாறு தெரியவில்லை. இவனுடைய ஆட்சிக்காலத்தில் உரோகண நாட்டிலிருந்த தாதுசேனன் கலகக்காரர்களைச் சேர்த்துக் கொண்டு படை திரட்டிக் கொண்டிருந்தான் என்று தோன்றுகிறது. பாண்டியன் பரித்தன் மூன்று ஆண்டுகள் அரசாண்டான்.[2]

இளம்பரிந்தன் (குட்டபரிந்தன், கி.பி.444-460)

பாண்டியன் பரிந்தன் காலமான பிறகு அவனுடைய தம்பியான இளம்பரித்தன் அரசாண்டான். இவனைக் குட்டபரிந்தன் என்று இலங்கை நூல்கள் கூறுகின்றன. குட்டபரிந்தன் என்றால் இளம்பரிந்தன் என்பது பொருள். அதாவது பரிந்தனுடைய தம்பி என்பது பொருள். இவன் பதினாறு ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய ஆட்சிக்காலத்தில், கலகக்காரனான தாதுசேனன் படைதிரட்டிக் கொண்டுவந்து இவனோடு போர் செய்தான். குட்டபரித்தன் அவனோடு போர் செய்து வென்றான். தோற்றுப் போன தாது சேனன் போர்க்களத்தைவிட்டு ஓடினான். போரின்போது தாதுசேனனை ஆதரித்துக் கலகஞ் செய்தவர்களை அடக்கினான். குட்ட பரித்தன் பல நன்மையான காரியங்களையும் தீமையான காரியங்களையும் செய்தான் என்று சூலவம்சம் கூறுகிறது.[3] என்ன நன்மைகளைச் செய்தான் என்ன தீமைகளைச் செய்தான் என்று கூறவில்லை. கலகக்காரர்களை அடக்கினது தீமையாகாது.

பாண்டியன் குட்டபரித்தன் இலங்கை நாட்டின் மதமான பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய கல்வெட்டுச் சாசனம் கிடைத்திருக்கிறது. இந்தச் சாசன எழுத்து இலங்கையின் பழைய தலைநகரமான அநுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு இப்போது அநுராதபுரத்து ஆர்க்கியாலஜி இலாகாவின் காட்சிச்சாலையில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனத்தில் இவன், பரிதேவன் என்றும், பரிததேவன் என்றும், புத்தாசன் (புத்ததாசன்) என்றும் கூறப்படுகிறான். இவனுடைய இராணி பௌத்த விகாரைக்குத் தானஞ் செய்ததை இந்தக் கல்வெட்டுக் கூறுகிறது. [4]


  1. Ibid 11-29
  2. Ibid 29
  3. Idid 30 -31
  4. Anuradhamburs slab inactiption of Kuddha Parinds by S.Paruruvikara pp. 111-115 Epigraphia Zeylanica. Vol. IV 1934-41