பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

46

இவனுடைய தாய் அரச காரியங்களில் அடிக்கடி தலையிட்டபடியால் அரசாட்சி முறையாகவும் ஒழுங்காகவும் நடைபெறவில்லை. ஆட்சி முறையில் குழப்பங்கள் நேர்த்தன. அரசாங்கத்து அலுவலர்கள் கைக்கூலி வாங்கியபடியால் ஆட்சி ஒழுங்கீனமாக இருந்தது. வலியோர் எளியோரை அச்சுறுத்தி வருத்தினார்கள். ஆட்சியில் குழப்பமும் கலகமும் ஏற்பட்டன.

கீர்த்தி ஸ்ரீமேகனுடைய பாட்டனான சிலாகால அரசனால் உரோகண நாட்டில் இறை தண்டும் அலுவலில் நியமிக்கப்பட்டிருந்த மகாநாகன் என்பவன், இராஜராட்டிரத்தில் குழப்பமான ஆட்சி நடப்பதையறிந்து இதுவே தக்கச்சமயம் என்று கண்டு உரோகண நாட்டிலிருந்து படையெடுத்து வந்து கீர்த்தி ஸ்ரீமேகனோடு போர் செய்து வென்று அரசாட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகள் இலங்கையைப் பத்தொன்பது நாட்கள் அரசாண்டான்.[1]

களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் இருத்த அரசியல் நிலையை இதனோடு நிறுத்துகிறோம். அரசனை ஊழியர் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் தந்தையை மகன் கொன்றும் அரசனை இராணி கொன்றும் தமயனைத் தங்கை கொன்றும் மருமகனை மாமன் கொன்றும் இவ்வாறெல்லாம் இலங்கை அரசியலில் கொலைகள் மலித்து இருந்த காலம் அது.


  1. Ibic 91-52