பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயிலை சீனி வேங்கடசாமி

60

பௌத்தமதம் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதும், சைவசமயம் எளிய - நிலையில் இருந்ததென்பதும் தெரிகின்றன.

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் பேர்போன பௌத்தர்கள் இருந்தார்கள். அவர்களுடைய முழுவரலாறு தெரியவில்லை . அங்குமிங்குமாகச் சில பௌத்தப் பெரியார்களுடைய வரலாறுகள் தெரிகின்றன.

சங்கமித்திரர்

இவர் சோழ நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்தர். கி.பி.4-ம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தவர். மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்த இவர் இலங்கைக்குக் சென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை அங்குப் பிரசாரஞ்செய்தார். இவர் காலத்தில் இலங்கையில் கோதாபயன் (மேகவண்ணாபயன்) என்னும் அரசன் (கி.பி.302-315) அரசாண்டிருந்தான், அக்காலத்தில் இலங்கையில் தேரவாதப் பௌத்தம் (ஈனயானம்) நெடுங்காலமாக இருந்து வந்தது. அப்போது அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பௌத்தப்பிக்குகள் வைதுல்ய மதத்தை (மகாயானபௌத்தத்தை) மேற்கொண்டனர். அதுகண்ட மகாவிகாரையில் இருந்த தேரவாத பௌத்தப்பிக்குகள் அரசனிடஞ்சென்று அபயகிரிலிகாரைப் பிக்குகள் மகாயான பௌத்தத்தை மேற்கொண்டதையும் பழைய தேரவாத பௌத்தத்தைத் கைவிட்டு விட்டதையும் கூறினார்கள். கோதாபய அரசன், மகாயான பௌத்தத்தைக் கைக்கொண்ட அறுபது பிக்குகளையும் நாடுகடத்திவிட்டான்.

நாடு கடத்தப்பட்ட பிக்குகள் சோழ நாட்டுக்கு வந்து சங்கமித்திரரைக் கண்டனர். சங்க மித்திரர், இலங்கைக்குப் போய்த் தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்ட உறுதி கொண்டார். அவர் இலங்கைக்குப் போய் தலைநகரமான அநுராதபுரத்தில் மகாயான பௌத்தத்தைப் போதித்தார். அப்போது தேரவாத பௌத்தப் பிக்குகள் இவரைப்பற்றி அரசனிடம் கூறினார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்துத் தேரவாத பௌத்தரின் தலைவரான சங்கபாலருடன் சமயவாதம் செய்யும்படிக் கூறினான். சங்கபாலரும் சங்கமித்திரரும் அரச சபையில் வாதம் செய்தார்கள். வாதத்தில் மகாயான பௌத்தரான சங்கமித்திரர் வெற்றியடைந்தார். அரசன் இவருடைய ஆழ்ந்த புலமையையும் கல்வியையும் பாராட்டினான். தன்னுடைய பிள்ளைகனான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்கனை இவரிடம் கல்விகற்க மாணாக்கராகவிட்டான். இதனால், சங்கமித்திரரின் மகாயான பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிற்று.

கோதாபயன் இறந்தபிறகு அவனுடைய மகனான ஜேட்ட திஸ்ஸன் முடி சூடி அரசாண்டான் (கி.பி. 323-333). அவன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டுக்கு வந்து விட்டார். ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். (கி.பி.334-351) இந்த அரசன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் மீண்டும்