பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

வத்தபோ' என்று சாசனலம்சம் என்னும் நூல் இவரைப் பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து ஆசாரிய தம்ம பாலதேரர் சிங்களத் (இலங்கை ) தீவுக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டில் படராதித்த விகாரையில் இருந்தபோது இதிவுத்தகம், உதானம், சரியாபிடகம், தேரசாதா, தேரிசாதா, விமானவத்து, பேதவத்து, நெட்டியட்டகதா என்னும் உரை நூல்களை எழுதினார். இந்த ஆசாரியதம்ம பாலிதேரர் சிங்களத்தீவுக்கு அருகில் உள்ள தமிழ்தேசத்தில் படராதித்த விகாரையில் இருந்தபோது இவற்றை எழுதினார்' என்பது. இவர் கி.பி.6-ம் நூற்றாண்டின் முற்பாதியில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் எனத் தெரிகிறது.

களப்பிரர் ஆட்சிக்காலத்தில், பௌத்தமதம் சமண சமயத்தைப் போலவே நாட்டில் பரவி வளர்த்திருந்தது. பௌத்த மத நூல்கள் பிற்காலத்தில் அழித்து போனபடியால் பௌத்த மதத்தின் முழு வரலாற்றையறிய முடியவில்லை.

முரண்பட்ட மூன்று மதங்கள்

கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண சமயமும் பௌத்த மதமும் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வந்தன என்பதையறிவோம். அந்தக் காலத்திலேயே இன்னொரு மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. அது வடமொழி வேதத்தை முதன்மையாகக் கொண்டமதம். இருக்கு யஜுர் சாமம் அதர்வனம் என்னும் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதிகமதம் அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தது. வைதிகமதத்தைப் பிராமணர் போற்றினார்கள். வேள்வி (யாகம்) செய்வதையே முதன்மையாகக் கொண்டது வைதிகமதம். பிராமணர் மிகச்சிறு தொகையினர். அன்றியும் சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகிய நோக்க முடையது. பிராமணரைத் தவிர வேறு சாதியர் வேதம் ஓதுவது கூடாது, பிராமணர்தான் உயர்ந்தசாதி, இவ்வாறு குறுகிய சிறிய கொள்கையுடைய வைதிகபிராமணர் மதம் நாட்டில் செல்வாக்கடையாமல் - மக்களிடையே பரவாமல் மூலையில் முடங்கிக் கிடந்தது.

ஜைனமதமும் பௌத்த மதமும் தத்தம் மதக்கொள்கையை நாடெங்கும் பிரசாரஞ் செய்து மக்களைத் தங்கள் மதத்தில் சேரும்படி அழைத்தன. தங்கள் மதக்கொள்கைகளை நாடெங்கும் பரப்பின. எந்தச் சாதியரானாலும் இந்த மதங்களைச் சேர்த்து ஒழுகினால் அவர்களைச் சிறப்புச் செய்து போற்றின. சமய நூல்களை நன்கு கற்று அதன்படி ஒழுகுகிறவர்களை சமய காரியர்களாக உயர்த்தி வைத்தன. ஆகவே பௌத்த மதமும் சமண சமயமும் நாட்டில் செல்வாக்குப் பெற்றுப்பரவிவளர்ந்தன. வைதிக மதமாகிய பிராமணமதமோ வேதத்தைப் பிறருக்குப் போதிக்கவில்லை. பிறர் வேதத்தைப் படிக்கவும் விடவில்லை. பிராமணப்பதவி என்னும் பதவியை அமைக்காமல் பிராமணப் பிறப்பு என்று ஜாதிக்கு ஏற்றம் தந்தது. ஆகவே வைதிகப் பிராமணமதம் தாழ்ந்து மங்கி மூலையில் கிடந்தது.

பௌத்தம் சமணம் வைதிகம் என்னும் இந்த மூன்று மதங்கள் ஆதிகாலம் முதல் பிறவிப்பகைமையுடைய மதங்கள். பிராமணர் பௌத்த சமண சமயங்களைப் பகைத்து வெறுத்து விஷம் போலக் கருதினார்கள். பிராமணர்