பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மயிலை சீனி வேங்கடசாமி 72

தனித்தன்மையையும் கெடுத்துக் கொண்டது போல, பாவினங்களை அமைத்த காலத்தில் தமிழர் பிராகிருத சம்ஸ்கிருத மொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் அப்படி அப்படியே எடுத்துக் கொண்டு தமிழின் தூய்மையையும் தனித்தன்மையையும் கெடுத்து விடவில்லை. பிராகிருத சம்ஸ்கிருத மொழிச் சொற்கள் ஓரளவு தமிழில் கலந்த போதிலும், அச்சொற்கள் தமிழ் மரபுக்கேற்பக் கிருதம் பெற்றபடியால் தமிழ், திராவிட இயல்பை இழக்காமல் இருக்கிறது.

புறப் பொருளும் அகப்பொருளும் - புதிய கருத்துக்கள்

பழமையான நான்கு வகைப் பாக்களோடு புதுவகையான பாவினங்கள் நல்லதோர் ஆக்கமாகும். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இன்னொரு மாற்றமும் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டது. அது அகப்பொருள் புறப்பொருள்களில் உண்டான புதிய கருத்துக்கள் ஆகும். சங்க காலத்தில் அகப் பொருளையும் புறப் பொருளையும் மக்களின் வாழ்க்கையோடு அமைத்துச் செய்யுட்களைப் பாடினார்கள். போர் வீரர் தங்களுடைய வீரத்தினால் பகைவரை வென்றதைப் பாராட்டிச் சங்கப் புலவர் செய்யுட்கனைப் பாடினார்கள். அவ்வாறே மக்களின் காதல் வாழ்க்கையைச் சிறப்பித்துச் செய்யுட்களை இயற்றினார்கள். இந்தப் பழைய புறப்பொருள் போரிலே கொன்று வெற்றி பெறுகிற உலகியல் வெற்றியைவிட அகப்பகையை வென்று வெற்றி கொள்வது சிறந்த உயர்ந்த வெற்றி என்றும் புதிய கருத்தைச் சைனரும் பௌத்தரும் உண்டாக்கினர். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்கிக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் அகப்பகைகளை வெல்கிற வெற்றி போர்க்களத்தில் பகைவரைக் கொல்கிற வெற்றியைவிட மேலான வெற்றி என்று புறப்பொருளுக்குப் புதிய கருத்துத் தோன்றிற்று. அகப் பகையை வென்ற அருகரும் (தீர்த்தங்கரரும்) புத்தர் பெருமானும், 'ஜினர்' (வெற்றி பெற்றவர்) என்றும் அந்த வெற்றியே மனிதன் உயர்கதிக்குச் செல்லக்கூடிய சிறந்த வெற்றி என்றும் சைனரும் பௌத்தரும் தங்கள் மதச்சார்பாகப் புறப்பொருளுக்குப் புதுப் பொருள் கூறினார்கள். அதாவது, மாந்தனின் போர்க்கள வெற்றியைப் புகழ்ந்து பாடுவதை விட ஜினர்களின் ஐம்புல வெற்றியைப் பாடுவது சிறந்தது என்னும் கருத்தைத் தோற்றுவித்தனர்.

பௌத்தரும் சைனரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்தை உண்டாக்கியதைப் போல, சைவ வைணவர் அகப் பொருளுக்குப் புதியதோர்கருத்தைக் கூறினார்கள். மனித வாழ்க்கையில் ஆளும் பெண்ணும் காதலித்துப் பெறுகிற சிற்றின்பத்தைவிட உயிர்கள் கடவுளைக் காதலித்துப் பெறுகிற பேரின்பம் சிறந்தது என்னும் புதிய கருத்தை அகப்பொருளுக்கும் கற்பித்தார்கள். உயிர்கள் (அதாவது ஆணும் பெண்ணும் ஆகிய உயிர்கள்)