பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

தலைவிகள் (காதலிகள்) என்றும் கடவுள் (சிவனும் திருமாலும்) தலைவன் (காதலன்) என்றும் இந்த முறையில் காதலி காதலன் பாவத்தில் கடவுளிடம் பக்தி செய்தால் பேரின்பமாகிய மோட்சம் (வீடுபேறு) பெறலாம் என்றும் சைவ வைணவர் அகப் பொருளுக்குப் புதிய கருத்துக் கூறினார்கள். அதாவது, நாயகி நாயகன் பாவத்தில் அகப்பொருள் கருத்து அமையக் கடவுளின்மேல் பக்திப்பாடல் பாடுவது சிறந்தது. என்று கூறினார்கள். ஆனால், அகப்பொருளைப் பற்றிய இந்தப் புதிய கருத்தைச் சைனரும் பெனத்தரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் நாயகி நாயகன் பாவத்தில் தங்களுடைய கடவுளின் மேல் அகப்பொருட்டுறை யமைத்த செய்யுட்களை இயற்றவில்லை. சைவ வைணவ சமயத்தார் மட்டும் அகப்பொருட்டுறை யமைந்த பாடல்களைத் தங்கள் கடவுளின் மேல் பாடினார்கள். இந்த மாற்றங்கள் கி.பி. 5-ம் நூற்றாண்டில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாயின என்று தோன்றுகின்றது.

பக்தி இயக்கம் தோன்றின காலத்திலிருந்து அகப்பொருள் துறைகள் அமைந்த தோத்திரப் பாடல்கனைச் சைவ வைணவர்கள் பெற்றத் தொடங்கினார்கள். இவ்விதப் பாடல்களைச் சங்ககாலத்தில் சங்கப் புலவர்கள் பாடவில்லை. பிற்காலத்து நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருட்டுறையமைந்த பாடல்களைத் தங்கள் கடவுள் மேல் பாடினார்கள். இந்த மரபு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. சைன பௌத்தர்களுக்கு இந்தக்கருத்து உடன் பாடில்லையாகையால் அவர்கள் தங்கள் கடவுளின்மேல் அகப் பொருட்டுறைப் பாடல்களைப் பாடவில்லை.

யாப்பிலக்கண நூல்கள்

பழைமையான நால்வகைப் பாக்களுக்குப் புதிதாகப் பாவினங்கள் உண்டாக்கப்பட்டன என்று கூறினோம். புதிய பாவினங்களுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. ஆகவே யாப்பிலக்கணம் (செய்யுள் இலக்கணம்) எழுதப்பட்டது. அந்தக் காலத்தில் பல புலவர்கள் புதிதான செய்யுள் இலக்கண நூல்களை எழுதினார்கள். பல செய்யுள் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. அந்தச் செய்யுள் இலக்கண நூல்கள் பிற்காலத்தில் வழக்கிழந்து மறைந்து போயின. மறைத்து போன அந்நூல்களைப் பற்றிச் சிறிதளவு, பிற்காலத்து நூலாகிய யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதிலிருந்து அறிகிறோம். மறைந்து போன அந்த நூல்களைப்பற்றி நாம் அறிந்தவரையில் கூறுகிறோம்.

அவிநயம்

அவிநயம் என்னும் இந்த நூலை எழுதியவர் அவிநயனார். இவர் சைன சமயத்தவர் என்று தெரிகிறார். அவிநயனார்யாப்பு என்றும் பெயரும் இதற்கு உண்டு. இராசப்பவுத்திரப் பல்லவ தரையன் என்னும் புலவர் இந்நூலுக்கு உரை எழுதினார். கி.பி.10 ம் நூற்றாண்டு வரையில் இந்த நூல் வழங்கிவந்து பிறகு மறைந்து போயிற்று. இந்த நூலிலிருந்து உரையாசிரியர் சிலர் சில