பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


முதற்பதிப்பு பதிப்புரை

னிதனுடைய வாழ்க்கையில் வரலாறு சிறப்பானதொரு இடம் பெற்றிருக்கிறது. மனித வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையும் வாழ்ந்து வந்த வழியையும் அறிந்து கொள்வது எதிர்கால வாழ்வை வடிவமைக்க இன்றியமையாததாகும்.

தமிழ் மொழியும் தமிழ் நாகரிகமும் தமிழர் பண்பாடும் நீண்ட நெடிய வரலாறு கொண்டிருப்பினும் இதனை முழுமையாக ஆராய்ந்து எழுதும் பணி இன்னும் முற்றுப் பெறவில்லை.

வரலாற்றுக்கு அடிப்படையான இலக்கியங்களும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் புதைபொருள்களும் இன்னபிற சான்றுகளும் தமிழகத்தில் கணக்கின்றிக் கிடைக்கப் பெற்றுள்ளன. இவற்றைத் தொகுத்துப் பகுத்து ஆயும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஆயினும் நமது உணர்வும் விரைவும் நம்பிக்கை தரக்கூடியனவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.

1837ஆம் ஆண்டிலிருந்து ‘கல் வெட்டு ஆண்டறிக்கைகள்’ (Epigraphical Reports) வெளியிடப்படுகின்றன. அந்தந்த ஆண்டு படியெடுக்கப்படும் கல்வெட்டுகள் கூறும் செய்திகளை ஓரிரு வரிகளில் இவை தெரிவிக்கின்றன. 1905 ஆம் ஆண்டு வரை படியெடுக்கப்பட்ட அனைத்துக் கல்வெட்டுக்களும் பின்னர் படியெடுக்கப்பட்டதில் அங்குமிங்குமாக ஒருசில கல்வெட்டுக்களுமே இதுவரை தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் (South Indian Inscriptions) என்ற பெயரில் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன. பிற கல்வெட்டுக்களின் முழுவடிவமும் முறையாக வெளியிடப்படவில்லை. இவையின்றிப்படியெடுக்கப்படாத கல்வெட்டுகளும் பல்லாயிரக்கணக்கில் மறைந்து கிடக்கின்றன.

தற்போது கல்வெட்டு ஆண்டறிக்கைகளில் வெளியிடப்படும் ஓரிருவரிக் குறிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. கல்வெட்டுக்களின் முழு வடிவத்தையும் படிக்காமல், ஓரிருவரிக் குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்வது முழுமையான ஆய்வாகவோ, முறையான முடிவுகளாகவோ அமைய முடியாது. முழு வடிவமும் கிடைக்கும்போது ஓரிரு வரிக் குறிப்புகளைக் கொண்டு பெற்ற முடிவுகளும் செய்த ஆய்வுகளும் மாற வேண்டியதாகலாம்.

அத்துடன் இதுவரை வெளியிடப்பட்ட கல்வெட்டு ஆண்டறிக்கைகளும் தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதிகளும் பற்பல ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நூல்களாதலால் ஆய்வாளர்களுக்கு அவை படிப்பதற்கும் கூட எளிதில் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற பல நூல்களும் ஏடுகளைப் புரட்டினாலே கிழிந்துவிடும் நிலையில் உள்ளன.

தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையினர் சென்னை, குமரி ஆகிய