பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

மாவட்டக் கல்வெட்டுகளை முழுமையாகவும் தர்மபுரி மாவட்டக் கல்வெட்டுகளைப் பகுதியாகவும் வெளியிட்டுள்ளனர்.

இதன்றி, மத்திய அரசுத் தொல்பொருள் துறைக்கும் மாநில அரசுத் தொல்பொருள்துறைக்கும் இடையே தொடர்பும் இணைப்பும் குறைவாக இருத்தலை அறிகிறோம். மத்திய அரசுத்துறையினர் பல ஆண்டுகளுக்கு முன் படியெடுத்துப் பதிப்பிக்க இயலாமல் அறைக்குள் பூட்டி வைத்திருப்பதை மாநில அரசுத்துறைக்கு வெளியிடக் கொடுத்துதவலாம். இருவேறு அரசுத்துறைகளும் தனித்தனியே படியெடுப்பதில் ஈடுபட்டு 'இரட்டிப்பு வேலை' தடத்துவதற்கு மாற்றாகப் பணிப்பங்கீடு செய்து கொண்டு பரவலாகப் பணியினை மேற்கொள்ளலாம். ஆய்வுத்துறையில் போட்டி மட்டுமல்ல, மனம் கலந்த ஒத்துழைப்பும் அவசியமாகும்.

வரலாற்றுச் சான்றுகளோ, தொன்மையான நாகரிகப் பின்னணியோ இல்லாத பல நாடுகளில் கூட குறுகிய கால வரலாறாக இருந்தாலும் வரலாற்றுச் சின்னங்களைப் போற்றவும் பாதுகாக்கவும் வரலாற்றை விரிவாக எழுதவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறார்கள்.

தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பல்லாயிரக்கணக்கில் கொண்டுள்ள நமது நாட்டினர் இவற்றை வெளியிடுவதில்கூட ஊக்கமும் உற்சாகமும் காட்டாமல் இருப்பது வேடிக்கையான புதுமையாகும். மேலும் முப்பது. . தாற்பது ஆண்டுகளுக்கு முன் கோயிலில் இருந்த பல கல்வெட்டுக்கள் 'கோயிலைப் புதுப்பித்தல்' என்ற பெயரில் அழிக்கப்பட்டுவிட்ட செய்திகளையும் அறிகிறோம்.

ஆகவே தமிழ் நாட்டுக் கோயில்களிலும் பிற இடங்களிலும் உள்ள கல்வெட்டுகள் அனைத்தையும் மாவட்ட வாரியாக விரைவில் படியெடுத்து, அவற்றை முழுமையாக வெளியிட வேண்டும். இவை வெளியிடப்படுவது தமிழக வரலாறு முழுமையாக முறையாக எழுதப்பட அடிப்படையினை அமைக்கும்.

கல்வெட்டுகள் வழி வரலாற்றின் வளர்ச்சிப் போக்குகள் யாவும் தனித்தனியாக ஆராயப் பெற்று, விரிவான பல நூல்களாக வெளியிடப்பட வேண்டும் என்று விழைகின்றோம்.

தமிழக வரலாற்றை எழுதிய சில வரலாற்றாசிரியர்கள் களப்பிரர் காலத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள். சேர சோழ பாண்டியரைக் களப்பிரர் வென்று வாகை சூடிய வரலாறும் அவர்களது ஆட்சி அமைப்பும் அவர்களுக்குக் கீழ் மக்கள் வாழ்க்கை நிலையும் அன்று நிலவிய பொருளாதார உறவுமுறைகளும் சமயங்களின் சமுதாய நிலைபாடுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தின் பெரும் நிலப்பரப்பைத் தனித்தன்மையுடன் ஆண்ட அவர்கள் எப்படி, ஏன் வீழ்த்தப்பட்டார்கள் என்பன போன்ற வரலாற்று உண்மைகளும் இன்னும் தெளிவில்லாமல் இருக்கின்றன.

களப்பிரர் காலத்தை முழுமையாக அறியக் கல்வெட்டுகள் இல்லை. அக்காலத்தில் கல்வெட்டுகளை வடிக்கும் பழக்கம் விரிவாக ஏற்படவில்லை. களப்பிரர் வரலாற்றைக் கூறும் தனி இலக்கியங்களும்