பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


களப்பிரர் காலத்தில் நுண்கலைகள்

ளப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் நுண்கலைகள் நன்றாக வளர்ந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், அந்தக் கலைகளைப் பற்றிய விவரமான செய்திகள் கிடைக்கவில்லை. சங்க காலத்திலே வளர்ந்திருந்த நுண்கலைகளைப் பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்களிலிருந்து அறிகிறோம். அதன் பிறகு களப்பிரர் ஆட்சிக் காலத்தில் அந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருக்க வேண்டும் என்று நம்பலாம். ஆனால் அந்தக் காலத்துக் கலைகளைப் பற்றி அறிவதற்கு ஆதாரமான சான்றுகள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள சான்றுகளும் குறைவாகவே கிடைத்துள்ளன. நுண்கலை என்னும் அழகுக்கலைகளை ஐந்தாகக் கூறுவர். அவை கட்டடக் கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பவை. நமது நாட்டுச் சிற்பக்கலை நூல்கள் கட்டடக்கலையையும் சிற்பக்கலையையும் ஒன்று சேர்த்துச் சிற்பக்கலை என்றே கூறுகின்றன. இசைக்கலை என்பதில் கூத்தும் நாடகமும் அடங்கும். களப்பிரர் காலத்தில் இருந்த இந்த நுண்கலைகளைப் பற்றிப் பார்ப்போம்.

கட்டடக்கலை

சைவம், வைணவம், பௌத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும் இருந்த களப்பிரர் காலத்துத் தமிழகத்தில் கட்டடக்கலை வளர்த்திருக்க வேண்டும். இந்த மதங்களின் கோயிற் கட்டடங்கள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும். அந்தக் கட்டடங்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், இரும்பு ஆகிய பொருள்களைக் கொண்டு கட்டப்பட்டவை யாகையால் அவை இக்காலத்தில் நிலைபெற்றிருக்கவில்லை. கருங்கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுகிற கற்றளிக் கோயில் கட்டடங்களும் பாறைகளைக் குடைந்து அமைக்கப்படும் குகைக் கோயில்களும் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் உண்டாகவில்லை. அவை பிற்காலத்தில் முதல் மகேந்திரவர்மன் காலத்தில் கி.பி.7-ம் நூற்றாண்டில் உண்டாக்கப்பட்டவை. (பிள்ளையார்பட்டி குகைக்கோயில் களப்பிரர் காலத்தில் உண்டாக்கப்பட்ட குகைக்கோயிலாக இருக்கலாமோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இதுபற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.)

களப்பிரர் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு கி.பி.7-ம் நூற்றாண்டில் இருந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பத்தரும் தங்களுடைய தேவாரப்பதிகங்களில் கூறுகிற கோயிற் கட்டட வகைகளான சுரக்கோயில், நாழற்கோயில், கோகுடிக்கோயில், பெருங்கோயில், இளங்கோயில், மாடக்கோயில், தூங்கானைமாடம், மணிக்கோயில் முதலான கட்டட வகைகள் களப்பிரர் காலத்திலேயே தோன்றி இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தக் கட்டட வகையெல்லாம் திடீரென்று 7-ம் நூற்றாண்டிலே தோன்றியிருக்க முடியாது.