பக்கம்:களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97 களப்பிரர் ஆட்சியில் தமிழகம்

எழுதப்பட்ட சுவர் ஓவியங்களே. பௌத்த சைன விகாரைகளிலும் பள்ளிகளிலும் கோவில்களிலும் சுவர் ஓவியங்கள் எழுதப்பட்டன. கடைச்சங்க காலத்தில் திருப்பரங்குன்றத்தின் மேல் இருந்த முருகக் கடவுளின் ஆலயத்தின் மண்டபச் சுவர்களில் வண்ண ஓவியங்கள் எழுதப்பட்டிருந்ததைப் பரிபாடல் கூறுகிறது. ‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுத வேண்டும்’ என்னும் பழமொழி, கட்டடச் சுவர்களில் சித்திரங்கள் எழுதப்பட்டதைத் தெரிவிக்கிறது. படத்தில் (படம் -துணி) சித்திரம் எழுதும் பழக்கமும் இருந்தது. படம் என்னும் சொல் துணியில் எழுதப்பட்ட ஓவியத்துக்குப் பெயராம். இக்காலத்தில் பலகை, காகிதம், ஆகிய பொருள்களில் எழுதப்பட்ட ஓவியங்களுக்குப் படம் என்று கூறப்படுகிறது. ஓவியக்கலை எளிதில் மறைத்துவிடக் கூடிய இயல்புடையது. களப்பிரர் காலத்துக் கட்டடங்கள் அழிந்து போனபடியால் அக்காலத்துச் சுவர் ஓவியங்களும் மறைந்து போயின. துணியில் எழுதப்பட்ட படங்களும் மறைந்து போயின.

இசைக்கலை

நுண்கலைகளில் ஓவியக்கலைக்கு அடுத்தபடியாகக் கூறப்படுவது இசைக்கலை. இசையில் யாழ், குழல், முழவு முதலான இசைக் கருவிகளும் அடங்கும். இசைக்கலையோடு கூத்துக் (நாடகம்) கலையும் அடங்கும். கூத்துக்கலையைப் பரத நாட்டியம் என்று இக்காலத்தில் வழங்குகிறோம். இசையும் கூத்தும் சங்ககாலத்திலே பெரிதும் வளர்த்திருந்ததைச் சிலப்பதிகாரத்தினால் அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இந்தக் கலைகள் மேலும் வளர்ந்திருந்தன என்பதை அறிகிறோம். களப்பிரர் காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் பதிகம் என்னும் இசைப்பாடலைப் பாடியுள்ளார். ‘தேவாரப் பதிகங்கள் இசைப்பாடல்களே. தேவாரப்பதிகங்களைப் பாடிய அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முன்னே களப்பிரர் ஆட்சிக்காலத்தில் இருந்த காரைக்கால் அம்மையார் முதல் முதல் பதிகம் (இசைப்பாடல்) பாடினார். அவர் பாடியவை இரண்டு பதிகங்கள். அவை திருவாலங்காட்டுச் சிவபெருமான் மேல் பாடப்பட்டவை. அப்பதிகங்களுக்குத் திருவாலங்காடு மூத்த திருப்பதிகங்கள்’ என்று பெயர் உண்டாயிற்று. முதல் பதிகத்தின் பண் நட்டபாடை. இரண்டாம் பதிகத்தின் பண் இந்தளம். காரைக்கால் அம்மையார் பாடிய முதலாம் மூத்த திருப்பதிகத்தில் 9-ம் பாடலில் பண்களின் பெயர்களையும் இசைக்கருவிகளின் பெயர்களையும் கூறுகிறார். அப்பாடல் வருமாறு:

துத்தம் கைக்கிளை விளரி தாரம் உழை இளி
         ஓசை பண்கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிச்சற்
         துந்துமி தாளம் வீணை
மத்தளங் காடிகை முன்கை மென்தோல் தமருகம்

         குடமுழா மொத்தை வாசித்