பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

538

இப்படி ஒரு கற்பனையைச் செய்து இறைவனைக் கேட்கிறார் அம்மையார்.

குளிர்சடையை மீது அழித்திட்டு
ஏற மிகப்பெருகின் என்செய்தி?

தான் அன்பு வைத்த குழந்தை வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, ‘ஏதாவது வண்டி ஏறிவிட்டிருந்தால் என்ன ஆகும்?’ என்று எண்ணி அஞ்சுவாள் தாய். குழந்தை எந்த ஆபத்துக்கும் உட்படாத பலமுடையதாக இருந்தாலும் தாயின் மனம் இவ்வாறு எண்ணிச் சஞ்சலம் அடைவது இயல்பு. அம்மையார் அவ்வாறு கற்பனையில் ஒரு விபத்தைக் கண்டு அங்கலாய்க்கிறார்.

கூறுஎமக்கு ஈது எந்தாய்!
குளிர்சடையை மீதுஅழித்திட்டு
ஏற மிகப்பெருகின்
என் செய்தி?— சீறி
விழித்துஊரும் வாள் அரவும்
வெண்மதியும் ஈர்த்துத்
தெழித்துஓடும் கங்கைத் திரை.

'எம் அப்பனே, இந்தக் கேள்வியை விடுக்கும் எமக்கு விடையைச் சொல். சீறிக் கோபத்தோடு விழித்து ஊர்ந்து செல்லும் ஒளியையுடைய பாம்பையும் வெண்மையான பிறையையும் இழுத்துக் கொண்டு ஒளிந்து ஓடும் கங்கையின் அலைகள் தாம் தங்கியிருக்கும் நின்னுடைய குளிர்ந்த சடையை மேலே அமிழ்த்திவிட்டு வெள்ளம் ஏறும்படியாக மிகப் பெருகினால் நீ என்ன செய்வாய்?'

[எமக்கு என்றது பெருமிதத்தால் வந்த பன்மை. ஈது — இதற்கு உரிய விடையை. இறைவனுடைய சடை, கங்கையும் பிறையும் சேர்ந்து தண்மை பெறாமல் இயல்பாகவே குளிர்ந்ததாதலின் குளிர் சடை என்றார். சடையை மீது அழித்துவிட்டு—சடையை மேலே பொங்கி அமுக்கிவிட்டு; அழித்தல்