பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

547

யாகக் கொண்டு ஆளுகிறான். ஆனால் தேவர்களை, மேலதிகாரி தன் கீழுள்ள அதிகாரிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வேலை வாங்குவது போல, அருள் தந்து தம் கடமைகளை ஆற்றச் செய்கிறான்.

என்னை உடையானும்
ஏகமாய் நின்றானும்
தன்னை அறியாத
தன்மையனும்—பொன்னைச்
சுருளாகச் செய்தனைய
தூச்சடையோன், வானோர்க்கு
அருள் ஆக வைத்த அவன்.

‘என்னை உடைமையாக உடைய ஸ்வாமியும், தானே தனித் தலைவனாக நின்றவனும், தன்னையே தான் அறியாத இயல்புள்ளவனும், செம்பொன்னைச் சுருளாகச் செய்தாற் போன்ற தூய சடையவனாகிய, தேவர்களுக்கு அருள் உண்டாகும்படியாக அந்தச் சிவபெருமான்.’

[உடைமைக்குச் சுதந்தரம் இல்லை. உடையவன் அதை எப்படி வேண்டுமானாலும் ஆளலாம். அப்படிச் சர்வ சுதந்தரனாகிய இறைவனுடைய திருவுள்ளப்படி இயங்குபவர்கள் அடியவர்கள். அதனால், 'என்னை உடையானும்' என்றார். மற்ற எல்லாப் பொருள்களும் தானேயாய் நிற்பவனாதலின் உயர்திணையாகச் சொல்லாமல் ஏகம் என்று அஃறிணையாற் சொன்னார். நின்றான் - தன் தலைமை நிலைமை மாறாமல் என்றும் நிலைத்து நின்றவன்; நின்றான் என்பது இறந்த காலத்தால் சொன்னாலும் கால வழுவமைதியால் முக்காலத்துக்கும் பொருந்தும். பொன் என்றது இங்கே செம்பொன்னை. செய்தனைய - செய்தாலனைய; விகாரம்.

'உடையானும், நின்றானும், தன்மையனும் சடையான், அவன்' என்று முடிக்க.]

இறைவனுடைய தனித் தலைமையைச் சொன்னது இந்தப் பாட்டு.

இது அற்புதத் திருவந்தாதியில் 92-ஆவது பாட்டு.