பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

550

பொழுதும் நினைக்கிறார். அது கருமை நிறம் பொருந்தி விளங்குகிறது. செம்பவளத் திருமேனியில் அந்த வண்ணம் எடுப்பாகத் தெரிகிறது.

அவன் கண்டாய்
மைத்து அமர்ந்த கண்டத்தான்.

அவன் கண்டம் ஆலகால நஞ்சை உண்டமையால் மை போலக் கறுத்துத் தங்கியிருக்கிறது. அதைத் தன்னிடத்தில் இருப்பதை விரும்பி ஏற்றுக் கொண்டது அந்தக் கண்டம். தேவர்களையும் பிறரையும் நடுநடுங்கச் செய்த அதை இறைவன் உண்டு கண்டத்திலே தேக்கி நலம் செய்தான். பிறருடைய துன்பத்தைப் போக்குவதில் இன்பம் காணுகிறவன் எம் பெருமானாதலின் அந்த நஞ்சைத் தன் திருக்கழுத்திலே வைத்திருக்கிறான். அந்தக் கண்டம் கருமை பெற்று விளங்குகிறது. அதை அவன் விருப்புடன் ஏற்றது மட்டும் அன்று, பிறரைச் சார்ந்திருந்தால் அவரையும் அழித்துத் தானும் அழிந்து போயிருக்கும் அந்த நஞ்சு. இப்போது அது இறைவனுடைய கண்டத்தில் கரிய நிறத்தோடு பொருந்தித் தங்கியிருக்கிறது. அதற்கும் சிரஞ்சீவித் தன்மை கிடைத்துவிட்டது.

“கறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
மறைநுவல் அந்தணர் ஏத்தவும் படுமே”

என்று அந்த நஞ்சுக்குக் கிடைத்த பெருமையைப் புறநானூறு சொல்கிறது.

அத்தகைய பரமோபகாரிபால் நீ அன்பு செய்து அவனையே விரும்பு. நீ நன்னெஞ்சமாகையால் நான் சொல்வதைப் புரிந்து கொள்வாய். அவனிடத்தில் மெய்யான அன்புடன் இரு. அவனையே விரும்பு’ என்கிறார்.

‘உள்ளம், பொய்தான் தவிர்த்து உன்னைப்
போற்றி சயசய போற்றி என்னும்,
கைதான் நெகிழவிடேன்’

என்பார் மாணிக்கவாசகர்.