பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

562

மாணிக்கத்தை வைத்திருப்பவன் சொல்வது போலச் சொல்கிறார்.

அவரும் இறைவனாகிய மாணிக்கத்தை ஒரு துணியினாலே போர்த்து அதனுள்ளே அதை அமைத்திருக்கிறாராம். வெறும் துணீயா அது? அன்பையே போர்வையாக்கி அதனால் போர்த்து அமைத்தாராம். இப்போது இறைவன் அன்பென்னும் போர்வைக்குள் அடங்கி நிற்கிறான்.

அன்புஎன்னும்
போர்வை யதனாலே போர்த்து அமைத்து.

பிறகு ஓரிடத்தில் அடைத்துவிட்டாராம். தானே தேடிப் பெற்றுத் தனக்கு உரிமையாக்கிக்கொண்ட மாணிக்கத்தை ஒருவன் தன் விருப்பம் போலப் பாதுகாத்து வைத்திருப்பான். "நீ ஏன் இதை இப்படி ஒளித்து வைத்திருக்கிறாய்?” என்று கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. ‘என்னுடைய பொருள் இது. இதை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். உனக்கு என்ன தெரியும்? நான் அதை உன் கண்ணில் காட்ட மாட்டேன். அதை யாராலும் காண முடியாது. நான் நல்ல பாதுகாப்பில் வைத்திருப்பதனால் அதனைக் காண வல்லார் யார் இருக்கிறார்கள்?’ என்று அவன் கேட்பது போலக் கேட்கிறார் அம்மையார். இறைவனைத் தம்முடைய நெஞ்சினுள்ளே அடைத்து வைத்துவிட்டார். அத்தகைய சிறப்பான உரிமையை அவர் பெற்றிருக்கிறார். அவருடைய நெஞ்சில் வேறு எதுவும் இல்லை. எந்தப் பொருளுக்கும் இடம் கொடாத அங்கே, அந்தரங்கமாக இறைவன் என்னும் மாணிக்கத்தை அடைத்து வைத்திருக்கிறார்.

சீர்வல்ல
தாயத்தால் நாமும் தனிநெஞ்சின் உள்ளடைத்து.

"யாரும் காணக்கூடாது என்ற எண்ணத்தால் ஒரு மாயம் பண்ணி அந்த மாயத்தினால் எம் தனியான நெஞ்சின் உள்ளிடத்தே மறைத்து வைத்திருக்கிறோம்” என்கிறார்.