பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100. யார் காண?


இறைவன் மயானத்தில் நடனமாடும் கோலத்தை மீண்டும் எண்ணுகிறார் அம்மையார். பேயோடு பேயாக நின்று கண்ட காட்சி அவர் உள்ளத்தில் அழுந்தப் பதிந்திருக்கிறது. மறுபடியும் வினாவை எழுப்புகிறார்.

இறைவன் நாகத்தைப் பூணாக அணிந்திருக்கிறான். அந்த நாகத்துக்கு ஐந்து தலைகள் இருக்கின்றன. அவன் ஆடும்போது அந்த நாகம் வாயைத் திறந்து அனலைக் கக்குகிறது. கீழேயும் தீ, சுற்றிலும் மயானத் தீ, பாம்பு உமிழ்வதும் தீ. எல்லாம் அனல்மயம். அங்கே தீப்பிழம்பாக நின்று நடனமாடுகிறான் இறைவன்.

இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் ஆடுகிறானே, அந்த நடனத்தைக் கண்டு களிப்பவர் யார்! இறைவனை விளித்து வினவுகிறார் அம்மையார்.

அங்காந்து அனல்உமிழும் ஐவாய
நாகத்தாய்!

'நீ ஆடுகின்ற நடனத்தை அங்கே வந்து யார் காணப் போகிறார்கள்? யார் கண்டு களிப்பதற்காக நீ தீ உண்டாகி எரியும் சுடுகாட்டில் ஆடுகிறாய்' என்ற கேள்வி அம்மையார் உள்ளத்தில் எழுகிறது.

'அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள்? அவனோடு இணைந்து என்றும் பிரியாமல் இருக்கிறாள் அன்னை. அவள் நல்ல பருவமடந்தையாகக் காட்சி அளிக்கிறாள். தங்கச் செப்புப் போன்று இளமையின் வளப்பத்தைக் காட்டும் நகில்களை உடையவள் அவள். அந்தப் பெருமாட்டிதான் அதைக்