பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

573

கண்டு களிக்கிறாளோ? அவள் தன் நடனத்தைக் காண வேண்டும் என்றுதானா இந்த நடனத்தை ஆடுகிறான்?

செப்பு ஏந்து இளமுலையாள் காணவோ?

அல்லது அந்த மயானத்தையே தம்முடைய வாசத்தானமாகக் கொண்ட பேய்க் கூட்டம் கண்டு களிக்கவே அவ்வாறு ஆடுகிறானோ?

இறைவன் ஆடும் மன்றங்கள் பல உள்ளன. இரத்தின சபை, கனக சபை, வெள்ளியம்பலம், தாமிர சபை, சித்திர சபை என்ற ஐந்து சபைகள் வெவ்வேறு தலங்களில் இருக்கின்றன. அந்த இடங்களில் ஆடும் நடனத்தைக் காணப் பேய்கள் வருவதில்லை. பக்தர்கள் கண்டு களிக்க ஆடும் அந்தத் தலங்களில் பேய்களுக்கு என்ன வேலை? உயிரோடு உலவும் மனிதர்கள் வாழும் இடத்தில் பேய்க்கு உணவில்லை; உற்சாகம் இல்லை. பிணம் சுடும் மயானத்தில்தான் அவை வாழ்கின்றன. அங்கேதான் அவற்றிற்கு உணவு கிடைக்கிறது.

அந்தப் பேய்களும் தன் நடனக்காட்சியைக் கண்டுகளிக்க வேண்டும் என்ற பெருங் கருணையால், அவற்றிற்காகவே சிறப்பாக இந்த நடனத்தை ஆடுகிறானோ?

தீப்படுகாட்டு
அப்பேய்க் கணமவைதாம் காணவோ?

இந்தக் காரணங்களில் ஏதேனும் ஒன்று உண்மையாக இருக்கவேண்டும். ‘மக்கள் வாழும் தலங்களில் மட்டுந்தான் ஆடுபவனா? என்னை விரும்பும் பேய்கள் உள்ள இடத்தில்கூட நான் ஆடுவேன்’ என்று காட்டுகிறானோ? ‘பாவம்! அந்தப் பேய்க் கணங்களுக்கு என்னுடைய நடனத்தைக் காண வேறு வாய்ப்பு இல்லை. ஆகவே அவை உலாவும் இடத்திலே அவை கண்டு களிக்க நான் ஆடிக் காட்டுகிறேன்’ என்று திருவுள்ளங் கொண்டு ஆடுகிறானோ?