பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574

எந்தக் காரணத்தைச் சொல்வது? அவன் திருவுள்ளம் எது என்று அவனேயே கேட்டு அறிந்துகொள்ளலாமே! ‘இந்த இரண்டு காரணங்களில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். அந்தக் காரணம் என்ன? எனக்கு அந்த ஒன்று இன்னதென்று சொல்’ என்கிறார் அம்மையார்.

செப்பு எனக்கு ஒன்றாகத்தான்.

நமக்கு இந்த இரண்டு காரணங்களும் தோன்றுகின்றன. ஆனால் அவன் எதற்காக, எந்த ஒரு காரணத்துக்காக, இந்த நடனத்தை ஆடுகிறான்? அவனே சொன்னால்தான் நமக்கு விளங்கும் என்று எண்ணிக் கேட்கிறார் அம்மையார்.

செப்புஏந்து இளமுலையாள் காணவோ? தீப்படுகாட்டு
அப்பேய்க் கணம் அவைதாம் காணவோ? செப்புஎனக்குஒன்
றாகத்தான், அங்காந்து அனல் உமிழும் ஐவாய
நாகத்தாய், ஆடுஉன் நடம்.

வாயைத் திறந்து அனலைக் கக்கும் ஐந்து வாய்களையுடைய நாகத்தை அணிந்த எம்பெருமானே, நீ ஆடுகின்ற உன் நடனமானது, தங்கச் செப்பின் தன்மையை ஏந்திய, இளமையின் அடையாளமாகிய தனங்களையுடைய அன்னை கண்டு களிக்கவோ? அல்லது, தீ உண்டாகும் சுடுகாட்டில் உள்ள அந்தப் பேய்க் கணங்கள் கண்டு மகிழவோ? இந்த இரண்டில் இன்னதுதான் காரணம் என்று ஒன்றாக எனக்குச் சொல்.

[செப்பு—தங்கச்செப்பு; தந்தச்செப்பும் ஆம். ஏந்து: உவம வாசகமாகவும் கொள்ளலாம். எவ்வுலகங்களையும் ஈன்றும் தாழாக் கொங்கையாதலின், செப்பேந்திளமுலை’ என்றார். ‘இங்கயற்கண் அகனுலகம் எண்ணிறந்த சராசரங்கள் ஈன்றும் தாழாக் கொங்கை’ என்று அதனைச் சிறப்பிப்