பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 112


ஜோனஸ் கெளசால்வ்ஸ் என்ற பொது உடன்பிறப்பாளன் ஒருவன் மலையாளத் தமிழ் எழுத்துகளை அச்சாக வெட்டிக் கிறித்துவ மதபோதக நூல்களை அச்சிட்டான். அடுத்த ஆண்டு பிளாஸ் சாங்டோரியம் தொடர்ந்து வெளியாயிற்று என்று குறிப்பிடுகிறார். எழுத்தாளர் இருவரும் ஒரே செய்தியை உறுதியாக எழுதியிருப்பது வியப்புத்தான். இதில் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொண்டு மற்றொன்றை விட்டுவிட வேண்டுமாயின், அதில் அதிகார வழியான ஒன்றை ஏற்றுக் கொள்வது நல்லது. டிசெளஸா பாலினஸிக்கு முந்திய நூற்றாண்டாகிய 17 ஆம் நூற்றாண்டில் கையெழுத்துப்படியிலிருந்து அவர் தமது புத்தகத்தைத் தொகுத்தமையாலும், அதில் திருநெல்வேலி தொடர்புற்றிருந்ததாலும், அதையே உண்மையானதாக ஏற்றுக் கொள்ளலாம். சோழமண்டலக்கரையில் முதலில் அச்சிடல் ஏற்பட்டதால், அது ஓர் அரிய நிகழ்ச்சியாகும். ஆனால், அது தொடர்ந்து செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. அடுத்தபடியாக 1679இல் தமிழ் எழுத்துக்கள் அச்சிடுவது கொச்சி நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னுமிடத்தில் நடந்ததாகக் கேள்விப்படுகிறோம்.

முத்துக்குளித்தல்

சீசர் பிரடரிக்குக் காலத்தில் முத்துக்குளித்தலின் விவரத்தைப் பற்றி அவரே கூறும் செய்தியை நான் இங்குச் சேர்க்கிறேன். பிரடரிக்குக் குறிப்பிடும் கரையில் உள்ள முத்துக்குளிக்கும் இடம் காயல் ஒன்றுதானாகையால், காயலிலிருந்தோ அல்லது புன்னைக்காயலி லிருந்தோதான் அவர் முத்துக்குளித்தலைப் பார்வையிட்டிருக்க வேண்டும். சீசர் பிரடரிக்கு என்பவர் வெனிஸ் நாட்டு வணிகர். மார்க்கபோலோவின் நாட்டைச் சேர்ந்தவர். 1563 இலிருந்து 1581 வரை பதினெட்டு ஆண்டுகள் அவர் இந்தியாவில் இருந்தார். அவர் திருநெல்வேலிக்குச் சென்றதும் முத்துக்குளித்தலை 1563 ஆம் ஆண்டிலோ அல்லது அதை அடுத்த அண்மைக்காலத்திலோ தான் பார்வையிட்டிருக்க வேண்டும்.

மன்னார் வளைகுடாவில் நடைபெற்ற முத்துக்குளியல்

கன்னியாகுமரியிலிருந்து காயலைச் சார்ந்த தாழ்ந்த கடற்கரைப் பூமியும் இலங்கைத் தீவும் முத்துக்குளிக்கும் இடமென்று வழங்கப்பட்டன. ஒவ்வோர் ஆண்டும் முத்துக் குளித்தல் மார்ச்சு அல்லது ஏப்ரலில் ஆரம்பித்து ஐம்பது நாட்கள் வரை நடைபெறும். முத்துக்குளித்தல் ஒவ்வோர் ஆண்டும் ஒரே இடத்திலேயே நடைபெறுவதில்லை; வெவ்வேறு இடங்களில் நடைபெறும்; ஆனால்,