பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 116

இறுதிவல்லின இகரம் ரகரமாக ஒலிக்கப்பட்டதால் தூத்துக்குடிக்கு இப்பெயர் ஏற்பட்டது. இதேவிதமாகவே அருகிலுள்ள மற்றோர் ஊரின் பெயராகிய மணப்பாடு என்பது 'மணப்பார்' என்றாயிற்று. டூட்டிகொரின் என்பதிலுள்ள கடைசி னகர மெய் ஒசைநயம் காரணமாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோலக் கொச்சி என்பது கொச்சின் ஆகவும் குமரி என்பது கோமரின் எனவும் மாறின. (எப்படி அமைதி). தூத்துக்குடி என்ற சொல்லுக்குக் ‘கிணறுகள் தூர்த்து நிரப்பப்பட்ட நகரம்’ என்பது பொருள், தூத்து என்பது சரியான தமிழில் தூர்த்து என வழங்கும். கிணற்றை நிரப்பித் தரைமட்டமாக்குதல் என்பது இதன் பொருள். குடி என்பது வசிக்குமிடம். அதாவது, நகரம். இந்தச் சொல்லிலக்கணம் சரியோ தவறோ, ஆனால் ஏறக்குறையத் தகுதியானப் பொருளைத் தருகிறது. ஏனெனில், பழைய கிணறுகளைத் தூர்த்து விட்டுப் புதிய கிணறுகளை வெட்டுவது தூத்துக்குடியில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். தூத்துக்குடி சாதாரண கிராமந்தான்.போர்ச்சுகீசியர் வருகைக்கு முன் சிறிது வியாபாரமும் இங்கு நடைபெற்று வந்தமை தெரிகிறது. ஆனால், போர்ச்சுகீசியர் இவ்விடத்தைப் பெரிதும் விரும்பித் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், இங்குத் துறைமுகம் இருந்ததுதான். சோழமண்டலக் கடற்கரையிலேயே இது ஒன்றுதான் முழு இயற்கைத் துறைமுகம். எல்லாப் பருவக்காற்றுகளிலிருந்தும் இத்துறைமுகம் தீவுகளாலும் மணல் மேடுகளாலும் இயற்கையிலேயே காப்பாற்றப்பட்டிருந்தது. ஆனால், தீவினைப் பயனாக இதன் ஆழம் மிகக் குறைவாயிருந்தமையால், இங்கு அறுபது டன் எடையுள்ள கப்பல்கள் மட்டுமே மிதக்கும். இந்தக் குறைபாடு மட்டும் இல்லாதிருந்தால், தூத்துக்குடி சென்னையையும் மிஞ்சிவிடும். எனவே, போர்ச்சுகீசியர் சில காலம் வரை புன்னைக்காயலைத் தமது முக்கிய நிலையமாக வைத்துக் கொண்டனர். ஆனால், அங்குத் துறைமுகத்திற்கான எவ்விதப் பொருத்தமும் இல்லாமல் திறந்த வெட்ட வெளி சாலை ஒன்றுதான் இருந்தது. ஆகையால், சுமார் 1580 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர் தூத்துக்குடியைத் தலைமைக் குடியேற்ற நகர் ஆக்கிக் கொண்டனர். பழம் போர்ச்சுகீசியர் பயன்படுத்திய மரக்கலங்கள் ஐரோப்பாவில் கட்டப்பட்டன. எனினும், அவை பெரிய உருவமுள்ள நல்ல நாட்டு மரக்கலங்களைவிட மிகப் பெரியனவல்ல. அதனால் அவை துறைமுகத்திற்குள் சுமையை ஏற்றி இறக்க வசதியுள்ளனவாய் இருந்தன. மேலும் இப்போது இருப்பதைவிட மிகக் குறைவான ஆழமே அத்துறைமுகத்திலிருந்திருக்க வேண்டும். இச்செய்தி உத்தேசமன்று; உறுதியானதேயாகும். ஏனெனில், பல ஆண்டுகளாகக் கடற்கரை வேகமாய் உயர்ந்து வருவதை நிறுவத்தக்க பல சாட்சியங்கள் இருக்கின்றன.