பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117 கால்டுவெல்


கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டிருக்கின்ற முக்கியமான தீவு பாண்டியன் தீவு என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீவிற்கு வெளியேயுள்ள ஆழமற்ற தண்ணீரில் கடல் நுரைக்கல் அதிகமாகக் கிடைக்கின்றது. தூத்துக்குடி நகரத்தில் மக்கள் தரையைத் தோண்டினால் இரண்டு அடி ஆழத்தில் ஒரு மெல்லிய படிவை (அடுக்கு) கண்டனர். அங்குக் காணப்பட்ட சிறிய தானியம் போன்ற மணற்கற்களை உள்நாட்டு மக்கள் உப்புக்கல் என்று கூறுவார்கள். கடல்நீரில் இந்நிலம் மூழ்கிய பொழுது மேற்படலம் கடினமானதால் ஏற்பட்டதே இந்த உப்புக் கல். அதற்குக் கீழுள்ள படலம் பெரிய தானிய அளவுள்ள கற்கள் மேலும், சிறிய கற்கள் கீழுமாக வண்டல் தெளியும் போது ஏற்படுவது போலக் கடல் மணல் இருப்பதை நாங்கள் கண்டோம். கடல் மணல், கிளஞ்சில்கள், ஆழமான கடலிலுள்ள கிளிஞ்சில்கள் முதலியன மேல்மட்டத்திலோ அல்லது அதற்குச் சில அங்குலங்கள் கீழேயோ இருக்கின்றன. இத்தகைய மணல் பாளையங்கோட்டைக்குச் செல்லும் வழியில் ஐந்தாவது மைல் கல்லருகே உள்ள கொரம்பள்ளம் வரை அமைந்திருக்கின்றது.

மற்ற இடங்களில் இருப்பதுபோலக் கடற்கரை முழுவதிலும் இந்த உப்புக்கல் விளைவு இருக்கிறது. உள்நாட்டில் அரை மைல் தூரம் வரை கூட இது காணப்படுகிறது. அதில் அதிகமாக இக்காலக் கிளிஞ்சில்கள் நிறைந்துள்ளன. ஆனால், உப்புக்கல்லருகே உள்ள கிளிஞ்சில்கள் உறுதியான கற்களாகவே உருமாறியிருக்கின்றன. மேல் பரப்பிலே கிடக்கும் கிளிஞ்சில்கள் கடினமாகி உருமாறுவதில்லை. பல கிளிஞ்சில்கள் அப்படியே இருக்கின்றன. சிலவற்றின் இயற்கை வண்ணங்கூடப் பழுதடையாமலிக்கிறது. அவற்றுள் சங்குகள், விலங்குகளின் உப்புப் போன்ற ஓடுகள் (Pectens), கிளிஞ்சில்கள், சில முத்துச் சிப்பிகள் இருப்பதைக் கண்டேன். கோரம்பள்ளம் மதகுக்கருகிலுள்ள இடங்களில் நான் இந்தச் சங்கு முதலியவைகளைக் கண்டேன். இப்பகுதி தூத்துக்குடியிலுள்ள தற்போதைய கடல்மட்டத்திற்கு மேலே 11 அடி உயரமுள்ளதாயிருக்கிறது. சங்குகள் சாதாரணமாக 7 பாகம் (42 அடி) ஆழமுள்ள தண்ணீரில் காணப்படுகின்றன. ஆனால், நாம் 5 பாகம் குறைவான ஆழமாக எடுத்துக் கொள்ளலாம். இவற்றின் வழக்கமான இருப்பிடம் 30 அடி ஆழந்தான் என்று அளவிடப்பட்டிருக்கிறது. இந்தக் குறைவான ஆழம் 11 பாகமானால் குறைந்தது 40 அடி ஆழத்தில் அவை காணப்படும். ஏனெனில், அந்தக் காலத்தில் தூத்துக்குடியில் கடலின் ஆழம் தூர்ந்தபோது கொரம்பள்ளத்திலுள்ள கடலடியிலே இந்தக் கிளிஞ்சில் மீன்கள் வசித்து வந்தன. இந்த முடிவைத் தூத்துக்குடிவாசிகள்