பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

121 கால்டுவெல்


என்று நாம் கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் கோட்டை அரண் கட்டப்படவில்லை என்று பாஸ்டியஸ் கூறுகிறார். 1700க்கு முன் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியில் ஒரு கோட்டை கட்டியதாகச் சொல்லப்படுவதால், அவர் அவ்வாறு எண்ணுகிறார் போலும்! எனினும், அதற்கு முன்பாகவே இப்போது உயர்சாதித் தமிழ்மக்கள் வசிக்கும் நகரப் பகுதி வாடி அதாவது அடைக்கப்பெற்றது என்று வழங்கப்பட்டது. போர்ச்சுகீசியர் காலத்திலும் டச்சுக்காரர்கள் காலத்திலும் தூத்துக்குடியின் முக்கிய வாணிகங்கள் இலங்கையுடன் நடைபெற்று வந்தன.

போர்ச்சுகீசியர் காலத்து நினைவுச் சின்னங்களாகத் தூத்துக்குடியிலிருப்பது ஒன்றும், கோவா கிறிஸ்தவக் கோவிலில் மற்றொன்றும் உள்நாட்டு ரோமன் கத்தோலிக்கப் பெண் ஒருத்தியின் சமாதிக்கல் ஒன்றுமாகும். 1618இல் நாட்டப்பட்ட இக்கல்லில் அப்பெண்ணின் பெயர் போர்ச்சுகீசியப் பெயராய்ப் பொறிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியிலுள்ள பழமையானப் பொருள் மிகப் பெரிய பாபாப் மரம். அது கிறிஸ்தவக் கோவிலுக்கு அருகே உள்ளது. அம்மரம் பூர்வீக அராபிய வணிகர்களால் நடப்பட்டிருக்க வேண்டும். அம்மரம் கிறிஸ்தவக் கோவில் கட்டப்படுவதற்கு முன்பே அங்கு இருந்ததென வாய்மொழிக் கதை கூறுகிறது. பாபாப் என்பது ஒரு ஆப்பிரிக்க மரம். அதை நீக்கிரோக்கள் ‘மங்கிபிரட்’ என்று வழங்குவார்கள். தூத்துக்குடி வாசிகள் அதைப் ‘பெயரில்லா மரம்’ என்று வழங்குகிறார்கள்.

டச்சுக்காரர் ஆட்சியில் தூத்துக்குடி

1595இல் முதன்முதல் டச்சு வியாபாரக் கப்பல் கிழக்கு நோக்கிப் புறப்பட்டது. 1602இல் முதல் டச்சுக்கப்பல் இலங்கைக்கு வந்தது. அந்த ஆண்டிலிருந்து 1658 வரை போர்ச்சுகீசியர் இலங்கையிலிருந்தும் சோழமண்டலக் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றப்பட்ட காலம் வரை டச்சுக்காரர்களும் போர்ச்சுகீசியரும் ஓயாத போரில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடியைப் பிடிப்பதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் 1655 இல் டச்சுக்காரர்கள் கொழும்பைக் கைப்பற்றினார்கள்.

டச்சுக்காரர்களுக்கு வேம்பாறு, வைப்பாறு, புன்னைக் காயல், பழைய காயல், மணப்பாடு, கன்னியாகுமரி முதலிய இடங்களில் வர்த்தகசாலைகள் இருந்தன. தலைமை வர்த்தக சாலைகளிலிருந்து நெடுந்துரத்தில் உள்நாட்டிற்குக் கூட உதாரணமாக ஆழ்வார் திருநகரியைப் போன்ற இடங்களில் பல வாணிபசாலைகள் இருந்தன.