பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கால ஆராய்ச்சி நடைபெற்றது முதல் சிராப்பள்ளி என்பது சிவன் கோயிலைக் குறிக்கலாயிற்றெனக் கொள்ளலாம். சிராப்பள்ளி என்னும் கோவிலைத் தன்னகத்தே கொண்ட ஊர் கி. பி. ஒன்பது, பத்து முதலிய நூற்றாண்டுகளில் சிற்றம்பர் எனப் பெயர் பெற்றது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது." "உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரில் உள்ள சிராப்பள்ளிக் கோயில்"," என்பது கல்வெட்டால் தெரிகிறது. எனவே, சிராப்பள்ளி என்ற பெயர் ஏறத்தாழக் கி. பி. 5 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டதென்பது தெளிவு. மாணிக்கவாசகர் தமது போற்றித் திருவகலில் (வரி 154), சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி என்று கூறியுள்ளார். இதனால் அவர் கி. பி. 5 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு. (2) சைவர்க்குள் சமயாசாரியர் முறைவைப்பு உண்டு. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பதே அம்முறை வைப்பு. இம்முறை வைப்பு முதன் முதலில் கி. பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தடிகள் கூற்றால் அறியலாம். வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய வன்பிற் பெருந்துறைப் பிள்ளையும்." பெருந்துறைப் பிள்ளை என்பது மணிவாசகரைக் குறிப்பது. கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமாபதி சிவம் இயற்றிய கோயிற் புராணத்திலும் மாணிக்கவாசகர் நான்காம வராக வைக்கப்பட்டுள்ளனர். கி.பி. 12ஆம் நூற்றாண்டிலும் 16ஆம் நூற்றாண்டிலும் செய்யப்பட்டனவாகக் கருதப்படும் இரண்டு திருவிளையாடற் புராணங்களிலும் மாணிக்கவாசகர் ஈற்றில் வைக்கப்பட்டுள்ளனர். மாணிக்கவாசகரைப் பெரிதும் கொண்டாடும் வீரசைவச் சான்றோராகிய சிவப்பிரகாச சுவாமிகளும் (கி.பி. 17ஆம் நூற்றாண்டு) தாம் இயற்றிய நால்வர் நான்மணிமாலையில் மாணிக்கவாசகர் துதியை நான்காம் துதியாகவே வைத்துள்ளார். அதே நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரும் தாம் பாடிய நால்வர் நான்மணி மாலையில் மணிவாசகரை நான்காம் ஆசாரியராகவே வைத்துப் பாடியுள்ளனர். இவ்வாறே சிதம்பர புராணம், சேது புராணம் முதலிய புராணநூல்களில் மாணிக்கவாசகர்துதி நான்காவதாகவே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்ச் சான்றோர் அனைவரும் சமயாசாரியர் நால்வரில் மணிவாசகரை ஈற்றில் வைக்க காரணம் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/125&oldid=793151" இலிருந்து மீள்விக்கப்பட்டது