140 கால ஆராய்ச்சி இவ்வாறு பொருந்தாச் செய்திகள் சில இருப்பினும், சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாற்றை அறிய உறுகருவி என்பதை மறுத்தற்கில்லை. ஆதலின், அதன்கண் காணப்படும் பெரும்பாலும் நம்பத்தக்க செய்திகளாவன: 1. சேக்கிழார் குன்றைநாட்டுக் குன்றத்தூரினர்; வேளாளர் மரபினர்; அவர் தம்பி பாலறாவாயர். குன்றத்தூரில் சேக்கிழார் கோவில் இன்றும் இருக்கின்றது. அதற்கு அண்மையில் பாலறாவாயர் குளம் இருக்கின்றது. சேக்கிழார் மரபினர் அங்கு வாழ்கின்றனர். 2. சேக்கிழாரை ஆதரித்த அரசன், அநபாயன் என்பதைச் சிறப்புப் பெயராகக் கொண்டவன். 3. சேக்கிழார் சோழ அரசியலில் தலைமை அமைச்சராய் இருந்தவர்; அங்ங்ணம் இருந்து, 'உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் பெற்றவர். அங்ங்னம் அரசற்கு அடுத்த அலுவலில் இருந்தமையாற்றான் அவருடைய சைவப்பற்றும், அவர் அறிந்த நாயன்மார் வரலாற்றுச் செய்திகளும், நிறைந்த தமிழ்ப் புலமையும், அரசனும் இளவரசனும் அறிய வாய்ப்புண்டானது எனக் கோடல் பெரிதும் பொருத்தமே ஆகும். 4. அவர் சோணாட்டுத் திருநாகேச்சரத்தில் ஈடுபட்டவர். அந்நினைவுகொண்டு தமதுரில் அப்பெயரால் கோவில் கட்டினவராகலாம். குன்றத்தூரில் இப்பெயரால் ஒரு கோவில் இருக்கின்றது. 5. சேக்கிழார் பெரிய புராணம் பாடியவர். இனி, அநபாயன் யாவன் என்பதைக் காண்போம். பின்னர்க் கல்வெட்டுச் செய்திகளையும் மேற்சொன்ன சேக்கிழார் வரலாற்றுச் செய்திகளையும் ஆராய்ந்து பொருந்துவன காண்போம். அநபாயன் யாவன்? சேக்கிழார் காலத்தைத் தத்தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு ஆராய்ந்து முடிபுகட்டிக் கூறினோர் பலராவர். அவர் முடிபுகளைக் கீழே காண்க: 1. சேக்கிழார் - இராசேந்திரன் I (கி.பி. 1012-1044) காலத்தவர்.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/149
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை