பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் காலம் 161 கம்பன் காலத்தது அன்று. இப்போது கிடைக்கும் இராமாயணப் பிரதியில் மிகப் பழையதாகிய தென் திருப்பேரைப் பிரதியில் இச்செய்யுள் காணப்படவில்லை. இதுவும் மிக முக்கியமான செய்தி. இப்பிரதி கொல்லம் 753 இல், அதாவது கி.பி. 1578 இல் எழுதப்பெற்றதாகும். எனவே, பிற்பட்ட காலத்தொருவரால் இச்செய்யுள் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். இவ்வாறே மக்கள் அபிமானித்துப் பாராட்டும் ஒரு நூலை மிகப் பழமையானதென்று காட்டுதற்கு ஆதாரமாகச் சில செய்யுட்களைப் புதிதாகப் புனைந்து புகுத்தியுள்ளமை இலக்கிய ஆராய்ச்சியாளர் அறியாததல்ல. கம்பனுக்கு மிகப் பிற்பட்டுத் தோன்றிய கச்சியப்ப சிவாசாரியார் (இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் காலத்தவர்) இயற்றிய கந்தபுராணத்தை இராமாயணத்திற்கும் ஒரு நூறு ஆண்டு முற்பட்டதெனத் தொன்மை காட்டும் பொருட்டுத் தோன்றிய செய்யுள் ஒன்றை இங்கே ஞாபகமூட்டலாம். அச்செய்யுள் வருமாறு: வேதமொடு வேதாங்கம் பயின்ற வல்லோன் விரிந்தசிவா கமம்உணர்ந்து மேன்மை பூண்டோன் போதம்நிறை சிவமறையோன் காஞ்சி வாழும் புனிதமிகு கச்சியப்ப குரவ னானோன் வாதமுறு புலவர்குழாம் மகிழ்ந்து போற்ற மதிமலிமா டம்புடைசூழ் குமர கோட்டத்து ஏதமறு சகாத்தம் எழுநூற்றின் மேலாய் இலகுகந்த புராணமரங் கேற்றி னானே. இங்குக் கூறியவற்றால், கம்பன் காலம் 9ஆம் நூற்றாண்டு என்னும் கொள்கை சிறிதும் வலியற்றாதாயொழிகின்றது. அவனது காவியத்திலுள்ள பல குறிப்புக்களினால் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமாயணத்தைப் பாடி முடித்தான் என்பது விளங்குகிறது. சோழ அரசர்களின் புகழ் உச்ச நிலையிலிருந்தபோது தான் கம்பன் வாழ்ந்திருந்தான். புவிபுகழ் சென்னிபேர் அமலன் தோள்புகழ் கவிகள்தம் மனையெனக் கனக ராசியும் என வந்துள்ளமை இதற்குச் சான்று. முதலாம் இராசராசனுக்கு முற்பட்ட அரசருள் ஒருவரையேனும் இங்ங்ணம் கூறுதல் கூடாது. "சென்னிநாள் தெரியல் வீரன் தியாக விநோதன் தெய்வப் பொன்னி நாட்டுவமை வைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/170&oldid=793260" இலிருந்து மீள்விக்கப்பட்டது