28 கால ஆராய்ச்சி ________________________________________________
இலங்கையைப் போலவே தமிழகத்தையும் பாதித்திருத்தல் இயற்கையேயாகும். அதனாற்றான் தென்மதுரை அழிய ஒரு கடல்கோளும், கபாடபுரம் அழிய மற்றொரு கடல்கோளும் காரணமாயிருந்தன என்று இறையனார் களவியலுரை இயம்புகின்றது போலும்! பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
என்னும் சிலப்பதிகார அடிகள்’ ஒரு கடல்கோளைக் குறிக்கின்றன. இது பேரழிவைக் குறிப்பது. தமிழகத்திலிருந்து இலங்கையைப் பிரித்த பெருங் கடல்கோளே சிலம்பு கூறும் இப் பேரழிவை உண்டாக்கியிருக்கலாம். அதனால் பாண்டிய நாட்டின் தென் எல்லை குமரியாறாயிற்று என்று கொள்ளலாம். கபாடபுரம் அழியக் காரணமாயிருந்த கடல்கோள் இலங்கையில் நிகழ்ந்த இரண்டாம் அல்லது மூன்றாம் கடல்கோளாயிருத்தல் வேண்டும். இரண்டாம் கடல்கோள் குறிப்பிடத் தக்க இழப்பை உண்டாக்கவில்லை என்று இலங்கை வரலாறு இயம்புகின்றது. எனவே, இலங்கையில் தோன்றிய மூன்றாம் கடல் கோளே கபாடபுரத்தை அழித்தது என்று கொள்வது, மேலே காட்டப்பெற்ற பல காரணங்களை நோக்கப் பொருத்தமாகும். ஆகவே, வேறு தக்க சான்றுகள் கிடைக்கும் வரையில், தொல்காப்பியம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டினர் என்று கருதுதல் தகும்.
பெயர் முதலியன
மதுரைப் பேராலவாயர், மதுரைக் குமரன் என வரும் பெயர்களில், மதுரை என்பது ஊர்ப் பெயர்: பேராலவாயர், குமரன் என்பன இயற்பெயர்கள். இவ்வாறே வெள்ளூர்க் காப்பியன் காப்பியாற்றுக் காப்பியன் என வரும் பெயர்களில் 'காப்பியன் என்பது இயற்பெயர். நக்கீரன், நப்பாலத்தான் என்றாற் போல வரும் பெயர்களில் 'ந' என்னும் சிறப்பு அடுத்து நிற்றல் போலப் பல்காயனார், தொல்காப்பியர் என்பவற்றிலும், பிற பெயர்களிலிருந்து பிரித்துக் காட்டப் பல்', 'தொல் என்னும் அடைமொழிகள் சேர்க்கப்பெற்றன என்று கொள்வதே பொருத்தமுடையது. தமது பெயரையே தாம் செய்த நூலுக்குத் தோற்றுவித்தார் என்னும் கருத்திற்றான் பனம்பாரனார்,
"தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி"
எனக் கூறினார். எனவே தொல்காப்பியன் என்பது ஒரு சொல் தன்மையில் வழங்கப் பெற்ற இயற்பெயர் என்று கோடலே தக்கது.