பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திருவள்ளுவர் காலம் புறநானூறு முதலிய எட்டுத்தொகை நூல்களும் பத்துப்பாட்டும் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் காவிய நூல்களும் சங்க நூல்கள் என்று ஒருசார் அறிஞர் கூறுவர். எட்டுத்தொகை நூல்களும் பத்துப்பாட்டும் சங்க நூல்கள் என்றும், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் அடுத்துச் செய்யப்பட்ட சங்கம் மருவிய நூல்கள் என்றும் பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் கூறுவர். கால ஆராய்ச்சியைப் புரிவோர் மறுக்க முடியாத வரலாற்று உண்மைகட்கு முதலிடம் தருதல் வேண்டும். அடுத்து, நூலிற் கூறப்படும் சமய உண்மைகட்கும், அகச் சான்றுகட்கும் புறச் சான்றுகட்கும் மதிப்பளித்தல் வேண்டும். இவ்வுண்மைகளை உளங்கொண்டு மேற்சொன்ன இருசார் அறிஞர் கூறும் நூல்களின் 'இறுதிக் கால எல்லை எதுவாக இருத்தல் கூடும் என்பதை ஈண்டு ஆராய்தல் நலமாகும். வட இந்தியாவில் கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பாதியில் பேரரசனாக இருந்த சமுத்திரகுப்தன் விந்திய மலைக்குத் தென்பால் படையெடுத்து வந்து அரசர் பலரை வென்றனன் என்றும், அவருள் காஞ்சியை ஆண்ட விஷ்ணுகோபன் என்ற பல்லவன் ஒருவன் என்றும், சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டுக் கூறுகின்றது. அக்காலம் ஏறத்தாழக் கி.பி. 340-350 என்னலாம்: இதனால் கி.பி. 3 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழகத்தின் வட பகுதியாகிய தொண்டை மண்டலம் பல்லவர் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது திட்டமாகத் தெரிகிறது: காஞ்சியிலிருந்து முதன்முதல் பட்டயம் விடுத்த சிவஸ்கந்தவர்மன் என்ற முதற்பல்லவன் ஏறத்தாழக் கி.பி. 3ஆம் நூற்றாண்டினன் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கூறுவர் பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் வேறு சில காரணங்களைக் காட்டிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/40&oldid=793324" இலிருந்து மீள்விக்கப்பட்டது