இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முன்னுரை தொல்காப்பியம், திருக்குறள் போன்ற தமிழ் நூல்களின் காலத்தைப் பற்றி அவ்வப்போது தமிழறிஞர் பலர் ஆராய்ந்து தத்தம் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். கல்வெட்டுக்களும் மேனாட்டு ஆராய்ச்சி முறையும் நன்முறையில் வெளிப்பட்டு வரும் இக்காலத்தில் கிடைக்கும் புதிய சான்றுகளைக் கொண்டு முன்னோர் முடிவுகளை ஆராய்தல் முறையாகும். இம்முறை பற்றி ஆராய்ந்த பெருமக்கள் முடிவுகளையும் எனது ஆராய்ச்சியிற்பட்ட முடிவுகளையும் தொகுத்துக் கூறுவதே இந்நூற் கருத்தாகும். காலம் செல்லச் செல்ல - புதிய சான்றுகள் வெளிப்பட வெளிப்பட - இம்முடிவுகளும் மாற்றம் பெறலாம். ஆராய்ச்சி முடிவற்றதன்றோ? இளம் புலவர்கள் ஆராய்ச்சித் துறையில் ஆர்வமும் உழைப்பும் கொண்டு பல உண்மைகளை ஆராய வேண்டும் என்னும் கருத்தாற்றான் இந்நூல் வெளியிடப் பெறுகிறது. மா. இராசமாணிக்கம்