சிலப்பதிகார காலம் 67 நூற்றுவர் கன்னர் செங்குட்டுவன் வட நாடு சென்றபொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னனும் அவன் படைகளும் கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனர் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. சாதகர்ணி என்னும் வடமொழிப் பெயரின் மொழிபெயர்ப்பே நூற்றுவர் கன்னர் என்பது. சாதகர்ணிகள் என்று அழைக்கப்பட்டவர் சாதவாகனர் என்ற ஆந்திரப் பேரரசரேயாவர். அவர்கள் ஏறத்தாழக் கி.மு. 235 முதல் கி.பி.220 வரையில் நடு இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டவராவர்." அவருட் சிலர் காலங்களில் ஆந்திரர் ஆட்சி கங்கை வரையிற் பரவியிருந்தது. அச்சிலருள் ஒருவனான கெளதமி புத்திர சாதகர்ணி என்ற ஆதிரப் பேரரசன் பெரும் புகழுடன் வாழ்ந்திருந்த காலம்தான் (கி.பி. 106-130) கயவாகுவின் காலத்தோடு (கி.பி. 114-135) பொருந்துதிறது. அக்காலத்தில் கங்கைக்கு வடபால் சிறுசிறு நாடுகள் அரசர் பலரால் ஆளப்பட்டு வந்தன என்பதும் வரலாறு கண்ட உண்மை. ஒரே காலத்தவர் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்குத் தம்பியாவார் என்று சிலப்பதிகாரம் வரந்தருகாதை (வரி 117-183) தெளிவாகத் தெரிவிக்கின்றது. செங்குட்டுவன், இளங்கோ ஆகிய இருவர் காலத்திலும் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரமே (காட்சிக் காதை) செப்புகின்றது. மேலும், உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தான் கேட்டனன் என்று சிலப்பதிகாரப் பதிகமும், இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திற மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் என்று மணிமேகலை பதிகமும் அவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே. கயவாகுவின் காலம் என்று துணியப்பட்ட கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியே சிலப்பதிகாரம் செய்யப்பட்ட காலம் என்று கொள்வது பொருத்தமாகும்.
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/74
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை