பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

23


முகம் விடியற்காலையில் தோன்றும் மதி போலம், அணி கலன்களின் நீக்கம் விண்மீன் திரள் மறைவு போலும், வெளிறிய உடல் அவ் இரவு போலும், கவி கற்பனை செய்கிறார். ர.3:2

ருவுற்ற பெண்ணுக்கு மண்ணைத்தின்ன மசக்கை எழுவதுண்டு. அரசிக்குப் பலவகை உணவுகள் கிடைக்குமெனினும், அவள் மண்ணை உண்ண விரும்பினாள்; ஏன்? தன் கருவில் வளரும் குழந்தை ஒரு காலத்தில் இந்த மண்ணுலகம் முழுவதும் ஆளப்போகிறான்; கருவிலேயே மண்ணுலகின் சுவையையும் அவன் அறியட்டுமே, என்பதனால். ர.3:4

செல்வங்களுக்கு உறைவிடம் நிலம்.உழைப்பால், நிலத்தின் செல்வங்கள் உணவுப்பொருள்களாகவும், கணிப்பொருள்களாகவும் வெளிப்படும் அவ்வாறே தீயில் வீரமும், நீரில் தூய்மையும் உள்ளன. நிலம், நீர், தீ ஆகிய மூன்றிலும் பொதிந்துள்ள ஆற்றல்களைப் பாதுகாத்து, உரிய காலத்தில் வெளிக்கொணர்ந்து குடி உயருவதற்கு இயக்க வேண்டும். இவற்றை எண்ணி, அரசன் நிலமாக, வன்னி மரமாக, சரசுவதி நதியாக அரசியைக் கற்பனை செய்தான். வளத்தையும் வீரத்தையும் தூய்மையையும் தாங்கி இருப்பவள் அரசி.

கருப்பம் உற்று இருந்தபோது உடல் வனப்பு புலப்படவில்லை. தற்போது மெல்லிய வயிற்றை உடைய கோசலை வெண்மையான விரிப்புள்ள அகன்ற படுக்கையில் கிடக்கிறாள். அவள் அப்போதே கரு உயிர்த்த இராமன் தாமரை மலர் போல அப்பாயலில் காணப்படுகிறான். ர.10:69

ல்வி கற்கத் தக்க முயற்சியும் தளரா உழைப்பும் உடல் காவலிட்டுத் தான் வாடவாட ஆற்றும் தவமும் இன்றியமையாதவை. அத்தகைய கல்வியே மெய் அறிவையும் புலன் அடக்கத்தையும் தரும்.

சுமித்திரை அக்கல்வி போன்றவள்; அவள் வருந்தி ஈன்ற இரட்டையர் நற்கல்வி தந்த மெய் அறிவும் புலன் அடக்கமும் ஒத்தவர்; பிறர் பணிக்கெனத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். ர.10:71