பக்கம்:குக்கூ.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

அறுபதுகளில் வந்த ஈழத்து மஹாகவியின் குறும்பாக்களில் மனம் பறிகொடுத்தவன் நான். அத்தொகுப்பை எத்தனையோ முறை படித்துச் சுவைத்துத் திளைத்தவன்.

ஆங்கிலத்தில் உள்ள Limericks என்னும் கவிதை வடிவத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தித் தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் மஹாகவி. அவருடைய குறும்பாக்களை அசைபோட்டு அசைபோட்டுப் பழகிய என் நா முதன் முதலில் ஒரு குறும்பாவை உதிர்த்தது.


ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் அமோகமாக நடந்து கொண்டிருந்த வேளை. மூன்று நான்கு நாட்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெரிய சித்திரைத் திருவிழாவின் கள்ளழகர், மாண்புமிகு எம்.ஜி.ஆர். தினமும் கூட்டம் அலைமோதியது. பல்கலைக் கழகத் கருத்தரங்கத்தைத் தவிர, பட்டிமன்றம், கவியரங்கம், நாட்டியம், நாடகம், தெருக்கூத்து, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் ஏகப்பட்ட கூட்டம். அங்கங்கே கூடிய கூட்டம் பொறுமையாய் அங்கங்கே நிலை கொள்ளவில்லை. அங்கே என்ன கூட்டம், இங்கே என்ன அதிகக் கூட்டம் என்று ஒவ்வோர் இடமாகப் போய்க் கொண்டிருந்தது.


கூட்டம் தமிழுக்காக வந்ததாகத் தெரியவில்லை. வேடிக்கை பார்க்க, கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்தது மாதிரி இருந்தது. இது என் மனத்தை உறுத்தியது.

அப்போது என் வாய் என்னையறியாமல் முணு முணுத்தது:

15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/17&oldid=1233679" இலிருந்து மீள்விக்கப்பட்டது