பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமைத்துக் கொள்ளவில்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், தமிழ் பயிற்று மொழியாகத் தமிழ்நாட்டில் இடம் பெறாதது தான். கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் - துறை தோறும் தமிழையே பயிற்று மொழியாக்க வேண்டும். ஆங்கில வழி கற்கும் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஆங்கிலத்தை ஒரு மொழியாக மட்டுமே கற்கவேண்டும். அறிவியலில் துறைதோறும் தமிழ் நூல்கள் காணவேண்டும். முன்னேற வேண்டும். இது தமிழன் செய்யவேண்டிய - காலம் வழங்கியுள்ள கடமை. இக்கடமையை நாம் நிறைவேற்றுவதைப் பொருத்தே நமது எதிர்காலம் அமையும்.

2. கல்வியியல் கட்டுரை

மானுடம் வெற்றிபெற வேண்டும். இது மானுடப் பிறப்பின் குறிக்கோள் பயன். மானுடம் வெற்றிபெற முதல் தேவை அறிவு; இரண்டாவது தேவை அறிவறிந்த ஆள்வினை; மூன்றாவது தேவை ஒப்புரவு நெறி மேற்கொண்டு ஒழுகுதல். இம்மூன்றனுள் முதல் நிலையில் அறிவு வாய்க்கப்பெறின் மற்ற இரண்டும் தாமே வந்தமையும். இம்மூன்றும் தனித்தனியே எண்ணிக் கூறப் பெற்றாலும் உடனிகழ்வாலும், ஒத்திசைவாலும் பயன்பாட்டாலும் ஒன்று போலவே கருதினாலும் தவறில்லை.

அறிவு தலையாயது. எப்பாடுபட்டேனும் அறிவைத் தேடுதல் வேண்டும். அறிவு எங்கிருந்தாலும் தேடிச் சென்றடைதல் வேண்டும். ஏன்? அறிவுடையோருக்கு எதிர் காலம் பற்றிய சிந்தனை உண்டு; செயல் உண்டு. அறிவுடையார் எல்லாம் உடையார். மானுடத்திற்கு வாய்க்கும் கருவிகளுள் மிகச் சிறந்த கருவி அறிவேயாம். அறிவு, மானுடத்தைத் துன்பத்திலிருந்து மீட்கும். அறிவு, மானுடத்தை வளர்க்கும்; புகழ்பெறச் செய்யும், அறிவு பெறுவதற்குரிய வாயில்கள் பலப்பல. அவற்றுள் தலையாயது கல்வி.