பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

97


மூலமோ கற்பித்துவிட முடியாது. மாணவரிடம் உள்ள குறைகள் நீக்கப் பெறுதல் வேண்டும். கல்வி கற்பதற்குரிய இனிய உள்ளார்வம் தோற்றுவிக்கப்பட்டாதல் வேண்டும். தண்ணீர் எப்படி மெள்ள மெள்ளக் கல்லையும் கரைத்துவிடு கிறதோ, அதுபோல ஒர் ஆசிரியர் தமது அன்பு நிறைந்த ஆர்வம் கூடிய முயற்சியால் எவ்வளவு மோசமான மாணவனையும் திருத்த முடியும்; அறிஞனாக்க முடியும். தேவை ஆசிரியரின் கருணையே!

நாம் நம்முடைய இளந்தலைமுறை பெறும் கல்வியில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும். இந்தக் கல்விப் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பள்ளி ஆசிரியர்களைப் போற்றுவோம்! அவர்களுடைய வாழ் நிலைகள் உயர உரியனவெல்லாம் செய்ய உறுதி கொள்வோம்!

நம்முடைய கல்வித்துறைக்கு இன்னும் பலமான அஸ்திவாரம் தேவை. இன்றைய சூழ்நிலையில் நம்முடைய கல்வித் துறைக்குப் பலமான அஸ்திவாரம் அமைப்பது கடினமாக இருக்கலாம். ஆயினும் செய்தேயாக வேண்டும். நமது உடல், உள்ளம், ஆன்மா - முக்கியமாகப் பணம் ஆகிய எல்லாவற்றையும் நமது இளந்தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும். இன்று சமயத்துறையிலும் அரசியல் துறையிலும் செய்யப்படும் முதலீட்டில் கணிசமான ஒரு பகுதியை பள்ளிகளுக்குச் செய்ய நாம் எண்ணவேண்டும். எண்ணினால் உறுதியாக நடக்கும்.

3. அறிவியல் யாருக்காக?

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்றது திருக்குறள். அறிவே வாழ்க்கையை இயக்கக்கூடியது. ஒரு நாட்டுக்குப் பெருமை சேர்ப்பவர்கள் அறிவுடைய