பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்களேயாவர். அறிவில்லாத மக்கள் தங்களுக்குத் தாங்களே தீமையும் செய்துகொண்டு மற்றவர்களுக்குத் துன்பமும் இழைப்பர்.

இயல்பாக அமைந்த வாழ்க்கை பதப்படுத்தப்படாத கச்சாப் பொருள் போன்றது. அறிவு நலஞ்சார்ந்த வாழ்க்கையில்தான் வாழ்க்கை வளர்கிறது; பண்படுகிறது; ஆன்மா சிறப்படைகிறது.

அறிவு எது? படிப்பறிவு அறிவுக்கு வாயிலேயாம். படிப்பறிவே அறிவாகாது. வாழ்வறிவுதான் அறிவு. அதாவது வாழ்க்கையை, வாழ்க்கையின் அமைவுகளை நிகழ்வுகளை அணுகும் பாங்கு, ஆய்வு செய்யும் பாங்கு ஆகியனதான் அறிவாகும். காரண காரியங்களை நுண்மாண் நுழைபுலத்துடன் ஆய்வு செய்தலே அறிவுடைமை. வாழ்க்கையில் துன்பங்கள், தீமைகள் ஒவ்வாமைகள் ஆகிய அனைத்துடனும் சமாதானம் செய்துகொண்டு அழுதுகொண்டே அனுபவித்துத் தீர்க்காமல் அவைகளுக்குரிய காரணங்களைக் கண்டு, அக்காரணங்களை அகற்றி நலன்களைப் படைப்பதூஉம், காண்பதூஉம், மானுட வாழ்க்கையின் தொழில்; குறிக்கோள்.

துன்பத்துக்குப் பகை அறிவே! "அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். இன்று நம்மிடையில் 'அறிவு' பற்றி நிகழும் கொள்கை என்ன? பல புத்தகங்களில் உரிய கருத்துக்களை மூளையில் ஏற்றி, பின் அவற்றைப் பேச்சாகவும் எழுத்தாகவும் தருவதே அறிவு என்று எண்ணம் பரவியுள்ளது. பல நூல்களைக் கற்பது அறிவு பெறத் தூண்டலாம்; துணை செய்யலாம். ஆனால் செய்களத்தில் பெறுவதே அறிவு. உலக வரலாற்றில் ஒளியைப் பரப்பிய தாமஸ் ஆல்வா எடிசன் மூவாயிரம் பொருள்களை - பொருள்களினூடே உள்ளீடாக இருந்த ஆற்றலைச் சோதித்து அறிந்தார்; அறிவைக் கருவியாக்கினார். அவருடைய புத்தறிவு புவியில் புது ஒளியைப் பரப்பியது. ஆம்! வாழ்க்கையில்