பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வழங்கியருளிய ஏசு வாழ்கிறார்! இதுதான் உளதாகும் சாக்காடு! இத்தகு வாழ்வியல் எளிதில் கிடைக்குமா? உடற்சுகமும் சோம்பலும் பேணப்படும் வரை சாதலே மிகுதி! உளதாகும் சாக்காடு ஏது? "உளதாகும் சாக்காடு" பற்றிய அறிவியல் மக்களிடையில் அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும்.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நீறீஇத் தாம்மாய்ந் தனரே

என்று புறநானூறு கூறியது. ஆதலால், துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாது சாவைக்கண்டு அஞ்சாது வாழ்தல் வேண்டும் என்ற அறிவியல் சார்ந்த உண்மையை நமது நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டு, வாழ்தலை விருப்புடன் நிகழ்த்த முன்வரும்படி செய்தல்வேண்டும். வெறும் பிழைப்பு நடத்தாமல் வாழவிரும்பும் மானுடத்தின் கருவியே அறிவுடைமை.

ஆன்மாவிற்கு அழிவில்லை. ஆன்மாக்கள் என்றும் வாழக்கூடியவையே. ஆனாலும் இந்த ஆன்மாக்கள் கால நியதிகளின்பாற்பட்டவை. அதாவது காலந்தோறும் உயிர்கள் பண்பாட்டு வாழ்நிலையில் படிமுறை வளர்ச்சிகளைக் கண்டாக வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் காலத்துடன் இசைந்த வளர்ச்சியை இழப்பின் வாழ்க்கை பாழ்படும். ஆதலால், காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி மேம்பாடடைதல் வேண்டும். மானுடத்தின் வாழ்வில் முதற்பொருள் காலமே என்பதறிக மக்கள் அறியாமையால் இன்று காலம் பொன் போன்றது என்றும், காலம் கண் போன்றது என்றும் கூறுகின்றனர். இது தவறு மட்டுமல்ல அறியாமையும் கூட காலம் வேறு எதனுடனும் இணைத்துப் பேசக்கூடியதல்ல; உவமிக்கக்கூடியதல்ல.

காலம், காலத்திற்கே நேர்; வாழ்க்கையின் முதற் பொருளும் காலமே என்ற அறிவுப்பார்வை மக்களிடத்தில்