பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

101


பரவிடவேண்டும். காலத்தை நல்ல நாள் என்றும் கெட்ட நாள் என்றும் ‘இராகுகாலம்’ என்றும் ‘சகுணம்’ சரியாக இல்லை என்றும் யோகம் சரியாக இல்லை என்றும் கூறிக் காலத்தை வீணாக்கும் அறியாமையை மக்களிடத்திலிருந்து அகற்றிக் காலம் பற்றிய அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்.

மக்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு. மக்களின் வாழ்க்கை அமைபுக்கு வேறு யாரும் காரணமல்ல. ஊழும்கூடக் காரணமல்ல. ஊழ் என்பதும் வாழ்க்கையிலிருந்து பிறந்த தத்துவமே! ஒவ்வொருவரின் பழக்க வழக்கங்களே ஊழ்த்து ஊழாக உருப்பெறுகிறது. மானிடர் தாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் விழிப்பாக இருக்கவேண்டும். இன்று தொடங்கும் பழக்கம் இன்றோடு நிற்பதில்லை. இன்றைய பழக்கம் சில நாட்களில் வழக்கமாக மாறிவிடும். வழக்கங்களிலிருந்து மனிதர் எளிதில் விடுதலை பெற முடிவதில்லை. ஆதலால் நமது பழக்கங்களும் வழக்கங்களுமே ஊழ் ஆகும். நமது பழக்கங்களும் வழக்கங்களுமே ஊழ் என்பது. அப்பழக்கங்கள் தவிரப் பழகுவதன் மூலமே ஊழினை வெற்றி பெறவேண்டும். “பழக்கம் தவிரப் பழகு மின்” என்றது சாத்திர நூலும், ஊழியல் குறித்த அறிவைத் தெளிவாகப் பெற்றால் வளர்ச்சி வந்து பொருந்தும். நன்றாக வாழலாம். நாடும் வளரும்.

மக்கள், தங்களுடைய வாழ்க்கையுடன் இணைந்துள்ள நிலம், நீர், தீ, வளி, வான் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய அறிவைப் பெறுதல்வேண்டும். நிலம், வாழ்க்கை நிகழும் இடம் மட்டுமல்ல. வாழ்க்கையின் இன்றியமையாத் தேவையாகிய உணவைத் தருகிறது. ஆனால், இன்று பலர் நிலத்தைப் பேணுவதில்லை; நிலத்திற்கு ஒருவகையான உயிர்ப்பு ஆற்றல் இருப்பதை உணர்வதில்லை; நிலத்தை வளமாகப் பாதுகாக்காமல் மண் அரிப்புக்கு இலக்காக்கியும், உரப்படுத்தாமல் பூசாரம் இழக்கச் செய்தும் அழிக்கிறார்கள்.