பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

109


ஒரு நல் வாய்ப்பு. மானுட வாழ்க்கை அருமையானது; மதிப்புயர்வுடையது.

“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி” என்பது திருமுறை மொழி.

மானுடம் பெற்றுள்ள அறிவுக் கருவிகள் ஐம்புலன்கள். மானுடத்திற்கு வாய்த்துள்ள செயற்கருவிகள் ஐம்பொறிகள். மானுடம் அற்புதமானது. மானுடம் வெற்றி பொருந்திய வாழ்க்கையை நடத்த வேண்டும். மானுடம், மானுடத்தின் தோற்றம் விந்தைமிகு அறிவியல் ஆக்கமாகும். இந்த மானுடம் தோற்றத்திலும் சரி, மானுடம் வாழும் புவிக் கோளத்திலும் சரி, எத்தனை கோடி இன்பச் சூழல்கள்! இயற்கை வளங்கள்! இவற்றில் மானுடம் அனுபவித்துவரும் மகிழ்ச்சி அனுபவங்களை எண்ணத்தான் இயலுமா? இந்த உலக அமைப்பில் மானுடத் தோற்றத்தில் எத்தனை எத்தனை அறிவியல் நுட்பங்கள்! யாரோ, எவரோ, எதுவோ ஒன்றின் செயல்திறன் புவிக்கோள இயக்கத்தில் வெளிப்படுகிறது. இந்த உலகத்தின் அமைப்பிலும், விளக்கத்தக்க இயக்கத்திலும் ஏதோ ஓர் ஒழுங்குமுறை பிறழா நிகழ்ச்சி இருக்கிறது. அது எதனால்? நிச்சயமாக மனிதனைவிட மேம்பட்ட சக்தியாக இருக்க வேண்டும். அது கடவுளைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? என்ற சிசிரோ என்னும் அறிஞனின் கருத்து சிந்தனைக்குரியது.

ஒரேயொரு சவ்வரிப் பிரமாணமுள்ள விந்து தாயின் கருப்பையில் அற்புதமான மானுட உடலை உருவாக்குகிறது! இந்த உலகப் படைப்பில் - இயக்கத்தில் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இருக்கிறது. அறிவுக்குப் புலனாகாத ஒரு இரகசியம் இருக்கிறது. இன்னமும் ஆய்வுக்குரியதாகவே அமைந்து இருக்கிறது. சிலர் அது கடவுள் என்பர்; சிலர் இயற்கை என்பர்; இன்னும் இது விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.