பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மானுடம் உடல் அல்ல; மானுடம் உயிர் அல்ல. மானுடம் உடம்பும் உயிரும் இணைந்தது. உயிர் அறிவுக் கருவிகள் பொருந்திய - புலன்கள் அமைந்த நுண்ணுடம் புடையது. மானுடத்தின் உடல், செயற்பாட்டுக்குரிய பொறிகள் அமைவுடன் கடியது. மானுடம் வெற்றிக்குரியது. மானுடம் வென்று விளங்குவதற்குரிய அமைவுகள் பலவும் கூடியது. அதனாலன்றோ கம்பன், “மானுடம் வென்றகம்மா!” என்று கூறுகின்றான்.

மானுட வாழ்க்கை ஒரு தொடர் நிகழ்ச்சி. மானுடத்தின் வாழ்க்கை என்று நிறைவு பெறும்? என்று முடியும்? யார் கண்டது: மானுடம் வெற்றி பெறுவது மானுடத்தின் வாழும் தரத்தைப் பொருத்தது. மானுடம் எதிர்பார்ப்புகள் பல உடையது. வரலாறே மானுடத்தால் தான் இயக்கப் பெறுகிறது. மானுடம் முதலில் வாழ்தல் வேண்டும். பிழைப்பு நடத்தக்கூடாது. வாழும் மாந்தர் சிலரே! பலர் பிழைப்பு நடத்துகின்றனர்; உண்டு, உறங்கிக் காலங்கழிக்கின்றனர்; வெந்ததைத் தின்கின்றனர் விதி வந்தால் சாகின்றனர். என்னே கொடுமை!! உண்டு உறங்கிச் சாவதற்காகவா வாழ்க்கை அல்லது கலகப் பூச்சிகளாகச் சிலநாள் வாழ்ந்து சாவதற்காகவா? இல்லை, இல்லை! மானுடம் வாழ்வதற்கே!. புலன்களை, பொறிகளை வென்று விளங்கும் வாழ்க்கையே வாழ்க்கை!

உருண்டோடும் நாள்கள் ஊனை வளர்ந்திடும்; உடலை வளர்த்திடும். ஆனால் உயிரை வளர்க்காது; உணர்வை வளர்க்காது. உயிரையும் உணர்வையும் வளர்க்கும் முயற்சி ஆன்மாவுக்குத் தேவை! ஆம்! கருவிகளைப் பயன்படுத்தத் தெரிந்த மனிதன் உலகியலில் வெற்றி பெறுகிறான். அது போல், தமது பொறிகளை முறையாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட மாந்தனும் வளர்கின்றான்; வெற்றி பெறுகின்றான். பொறிகள், மதம் பிடித்த யானைகள்! இவைகள் மாவுத்தனைத் தம் தம் திசையில் இழுத்துச் செல்லும்! இப்