பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களினாலும் கருவியைக் கண்டு பிடித்தான். மனித நாகரிகம் மனிதனுக்குக் கருவித் தொடர்பு கிடைத்ததிலிருந்து தான் மாறி வளர்ந்து வருகிறது. முதலில் கல், கம்பு முதலியன கொண்டு வேட்டையாடினான். அதன்பின் ஈட்டி, வில் - அம்பு முதலியன கண்டு வேட்டையாடினான். இறைச்சியைச் சுட்டுப் பக்குவப்படுத்தித் தின்றான். பாலுணர்வு - மான உணர்வு தலைதூக்கியது. தழைகளை உடுத்துக் கொண்டான். அதன்பின் மெள்ள மெள்ள ஆடை உலகத்திற்கு வளர்ந்து வந்தான். வேளாண்மை செய்தான். விலங்குகளை வளர்த்தான். குகைகளில் வாழ்ந்தவன் வீடுகள் கட்டினான்.

தொடக்க காலத்தில் மனித குலம் இயற்கைக்கு அஞ்சி வாழ்ந்தது. பின் இயற்கையைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டது. இப்போது மனிதகுலம் இயற்கையை வென்று வாழத் தலைப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை மனித குலம் செய்ய முடிந்தது சிந்தனை செய்யும் இயல்பினாலேயாம். இன்று மனிதன் காலத்தையும் காலனையும் வென்று விளங்குகின்றான். இன்று தூரம் ஒரு பிரச்சனையல்ல. உலகம் சுருங்கி வந்துவிட்டது. இன்றைய மனிதன் அறிவியலைக் கருவியாகக் கொண்டு சந்திரன் இயல்பு கண்டு ஆராயத் தலைப்பட்டுள்ளான். கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் ஏவுகணைகள் செய்துள்ளான். மனிதனின் வளர்ச்சி அற்புத மானது; அதிசயிக்கத் தக்கது. ஆயினும் உலகியலில் வளர்ந்துள்ள அளவுக்கு அருளியலில் வளரவில்லை. நயத்தக்க நாகரிகம் வளரவில்லை.

மனித நாகரிகம் மேம்பாடு அடையாமல் பழைய சரித்திரத்தை நோக்கித் திரும்பச் செல்கிறது. கற்கால மனிதர்களைப் போலக் கலகம் செய்கிறான். விரிந்த பரந்த உலகத்தில் வாழ்வதறிந்தும் சின்னப் புத்தியையே பாராட்டுகிறான். திரும்பவும் மனிதனை மடைமாற்றம் செய்து வாழச் செய்ய வேண்டும்.