பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

119


அவலம்? அறியாமை என்றால் என்ன? பெரும்பாலோர் தங்களுடைய அறியாமையையே அறிவு என்று பறைசாற்றிக் கொண்டு உலாவருகின்றனர். ஐயோ.. பரிதாபம்! “அறிவுடையோம் யாம்!” என்னும் செருக்கே அறியாமைதான்! அறியாமை என்பது ஒன்றும் தெரியாமையன்று. யாதொன்றும் அறியாதார் உலகில் அன்றும் இருந்ததில்லை; இன்றும் இல்லை. இனிமேலும் இருக்கமாட்டார்கள். அப்படியானால் அறியாமை என்பது என்ன? ஒன்றைப் பிரிதொன்றாக முறை பிறழ உணர்தலுக்கு அறியாமை என்று பெயர். அதாவது நல்லதைத் தீயதென்றும் தீயதை நல்லது என்றும் இன்பத்தைத் துன்பம் என்றும் துன்பத்தை இன்பம் என்றும் முறை பிறழ உணர்வது அறியாமை.

‘நன்றுடையானை, தீயதில்லானை’ - என்பது தேவாரம். நன்றுடையான் என்று கூறினாலே போதும்; தீயதில்லான் என்று எதிர் மறையாகவும் கூறியது எதனால் என்று ஆய்வு செய்க! மக்கள் நன்மை, நல்லது, நன்று என்று எண்ணிக்கொண்டிருப்பவை பல தீமையும் கலந்த நன்மையேயாம். எது நன்று? எது நன்மை? எங்கும் எப்பொழுதும் - எல்லாருக்கும் எது நன்மை பயக்குமோ அதுவே நன்மை. ஒருபொழுது நன்மையாக இருப்பது பிறிதொரு பொழுது தீமையாக்வும் இருப்பது நன்மையாகாது. அதுபோலவே, ஒருவருக்கு நன்மையாகவும் பிறிதொருவருக்குத் தீமையாகவும் இருப்பது நன்மையாகாது. அதனால் மக்கள் நன்மையென்று கருதிக் கொண்டிருக்கும் தன்மையல்ல கடவுள், இது அறியாமைக்கு ஓர் எடுத்துக் காட்டு.

வாழ்க்கை ஒரு நெடியபயணம். பல்வேறு துறைகளையும் படிகளையும் இடர்ப்பாடுகளையும் கடந்து வளர்ந்து முன்னேற வேண்டியது வாழ்க்கை. பல்வேறு மனிதர்களைச் சந்திக்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் வாழ்க்கையில் உண்டு. எண்ணத் தொலையாத சிக்கல்களுக்குத் தீர்வு உண்டு.